எந்த வீட்டுக் குழந்தையென்றாலும்
கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன்
பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக்
குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன்.
அன்று மாலையும் அப்படியேதான்!
புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து
விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை
பேனா கொடுத்துப் பழக்கம் செய்ய
நேரம் அதிகம் ஆகவில்லை.
மிக மிக சீக்கிரம் நண்பர்களானோம்.
சொற்கள் தொடாத செப்புவாய் திறந்து
“கக்கக்கா”வெனக் கவிதைத் தெறிப்புகள்
குதலையின் சுகத்தில் காணாமல்போய்
மொழியைத் தொலைத்து மண்டியிட்டிருந்தேன்.
என்னையும் பொம்மையாய் எண்ணிய குழந்தை
தன்னிரு கைகளால் தொடவந்தபோது
புயலாய் வந்த நீ, பிள்ளை அப்படி
அள்ளிப்போனது அநாக ரீகம்தான்.
இன்னும் சிறிது நேரம் எங்களின்
அண்மை தொடர நீ அனுமதித்திருக்கலாம்.
மழலையும் வராத மலரிடம் போய்… நம்
பழைய காதலைப் பேசவா போகிறேன்?
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)