ஒரு
நேர்க்கோடு வரையத்தான்
நீண்ட காலமாய் முயல்கிறேன்.
வேண்டாத இடங்களில்
அது வளைந்து கொள்கிறது.
நான் சேமித்து வைத்திருக்கும்
பதில்களின் பின்னால்
நின்று கொண்டு
அவற்றைக்
கேள்விகளாக்கி விடுகிறது.
சாதாரண சம்பவங்களில்கூட
ஆச்சரியக் குறியாய்
விழுந்து
அசிங்கம் செய்கிறது.
சத்தியங்களை
அடிக்கோடிடும் போதெல்லாம்
அடித்தல் கோடாக மாறி
அதிர வைக்கிறது.
சூனியமே
சுகமென்றிருக்கையில்
வெற்றிடங்களைக் கோடிட்டு
நிரப்பச் சொல்லி நீட்டுகிறது.
ஒரு கோட்டில்
சிந்திக்க விடாமல்
உபத்திரவம் செய்கிறது.
கவிதையின் பயணம்
தன்போக்கில் நிகழ
அனுமதியாமல்
குறுக்குக் கோடாய்க் கிடக்கிறது.
நிமிர்த்தவே முடியாதென்று
அயர்ந்து விழும்போது மட்டும்
நேராகி
விழித்துப் பார்த்ததும்
வளைந்து கொள்கிறது.
லட்சுமணக் கோடாய்,
கைரேகைக் கோடாய்,
வெவ்வேறு முகம் காட்டி
நிலை குலையச் செய்கிறது.
கோடு உருவாவது
புள்ளிகளாலா
அல்லது புதிர்களாலா
என்பதுதான்…
இப்போது புதிராக
இருக்கிறது.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)