ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த
மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது.
“ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும்
பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று.
வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு
வேறுதிசையில் விரையலாயிற்று.
மேஸ்திரி நாக்கு மேலண்ணத்தோடு.
சாஸ்திரி வீதி மட்டுமில் லாமல்
அத்தனை தெருக்களும் அசைந்து நடந்தன.
தத்தம் போகில் சிதறிக் கலைந்தன.
பஞ்சாயத்து போர்டுக்குக் கிளம்பினோர்
பைத்தியக்கார மருத்துவமனைக்குள்.
கொடியுடன் கிளம்பிய பேரணி ஒன்று
சுடுகாட்டுக்குள் சென்று சேர்ந்தது.
சூழ்ச்சியா? மாயமா? சூழலை ஆய்ந்திட
ஆட்சித் தலைவரின் அவசர அழைப்பால்
மேலதிகாரிகள் கிளம்பிய கார்களோ
நேராய்ப் போனது குப்பைக் கிடங்கிற்கு.
பகுத்தறிவில் கரை கண்டதோர் அறிஞர்
பகவதி கோவில் பிரகாரத்தி லிருந்தார்.
கொலைகாரன் குப்பமும், காந்தி வீதியும்
தலைகா லின்றித் தழுவிக் கிடந்தன.
பெரியார் வீதியில் பயணம் தொடங்கினால்
சந்நிதித் தெருவில் சென்று புகுந்தது.
வழியினைக் காட்டும் வீதிகள் இப்படி
குழம்பிடக் கண்டு குமுறினர் மக்கள்.
அரையடி வீதிக்கும் காலடிவீதிக்கும்
“பிரதான சாலை” பெயருக்குச் சண்டைகள்;
நான்தான் தெரு வென்றும் நீவெறும் சந்தென்றும்
மோதல்கள் வலுத்தன; வலியவை ஜெயித்தன;
முற்றும் வெறுத்த மனிதர்கள், வீடுபோய்
சற்றே தலையைச் சாய்த்திட நினைத்தனர்.
எந்த வீதியில், எப்படி நடந்தால்
சொந்த வீடுபோய்ச் சேரலாமென்பது
புரியாக் குழப்பமாய்ப் புதிராயிருந்தது.
பாதைகளை நம்பிப் பயணம் தொடங்கினோர்
நாதியில்லாமல் நடுத்தெரு நின்றனர்.
வீதிகள் நடுவில் விளங்கிய சிலைகள் முன்
நீதிகேட்டு நெடும்போர் புரிந்தனர்.
மக்கள் வெள்ளத்தில் நடுநின்ற சிலைகளோ
துக்கம் பொங்கத் தலை கவிழ்ந்திருந்தன.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)