வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும்
நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம்.
பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து
நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா?
வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான்.
கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக்
கணக்கில் கொள்ளாத கவிதையை என் செய?
மரங்களில் பூசிய மர்மக் கறுப்பை
விலக்குவதில்தான் நிலவின் ஜாலம்.
நீல வானத்தில் பாலைச் சிந்திய
கிண்ணம் போலக் கவிழ்ந்துள்ள கோலம்.
கடலலைகளின் கைகளைப் பற்றி
கும்மியடிக்கிற கொள்ளை நிலவோ
கனத்த மோனத்தில் கனல்கின்ற மலைகள்மேல்
கனகாபிஷேகமாய்க் கிரணங்கள் பொழியும்.
இரவல் வெளிச்சமாயிருந்தாலென்ன?
இரவில் சுயத்தை இழப்பதே நல்லது.
பௌர்ணமி நிலவின் பெருமையை மனிதன்
அமாவாசையில் அறிந்துகொள்கிறான்.
இரவெனப்படுவது இருள்தான் என்கிற
மரபை உடைக்கின்ற மகத்துவப் பொழுதில்
மலைகள், வானம், மரங்கள், நதிகள்
எல்லாம் ஒளிரும் எழில்தான் பௌர்ணமி.
சுற்றிலும் உள்ளதை சுடர்விடச் செய்வது
மொட்டு நிலவின் மிகப்பெரும் சிறப்பு.
பக்கத்து மனிதனைப் பரவசம் செய்தால்
நிலவுபோல் நீயும் நிரந்தரமாவாய்!
(இதுவும், இதற்கடுத்த கவிதையும் 30-04-1999 அன்று ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற “புத்த பூர்ணிமா” நிலா தியானத்தின் அதிர்வுகள்… பதிவுகள்…)
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)