கவிஞர் இளந்தேவன் தன் 71ஆவது வயதில் காலமானார் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.கவியரங்குகளைக் கட்டியாண்ட களிறனைய கவிஞர் அவர். இயற்பெயர் முத்துராமலிங்கம்.கணித ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். எம்ஜி.ஆர்.பற்றி அவர் எழுதிய கவிதைகளைக் கண்டு மகிழ்ந்த அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன், அவருக்கு மக்கள் தொடர்பு அலுவலர் பதவி வழங்கினார். பின்னர் தமிழரசு இதழின் ஆசிரியர் உட்பட பல பொறுப்புகள் வகித்தார்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆசிக்காலத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலராய் அவர் பணிபுரிந்த கதைகளை நாடறியும்.பின்னர் அரசியல்வாதி ஆக முயன்று தோற்றார்.
கவிதை உலகில் தனக்கென ஒரு சிம்மாசனத்தில் இருந்தார். அரசியல் அலைக்கழிப்புகள் தனிவாழ்வின் சோகங்கள் ஆகியவற்றைக் கடந்து உற்சாகமான கவிஞராக உலா வந்தார்.
கனவு மலர்கள், வெளிச்ச விரல்கள் உள்ளிட்ட பல கவிதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். கைக்கடக்கமான பல பக்திப் பாடல்களையும் பதிப்பித்துள்ளார். அவை அனைத்திலுமே அபாரமான கவிதை வீச்சுகள் கனிந்திருக்கும்.ஒன்றிரண்டு குழந்தைகள் மழலைப் பருவத்திலேயே இறந்தன.பதின்வயதுகளில் ஒரு மகன் விபத்தில் இறந்தான்.
குழந்தையாய் இறந்த மகளைப் பற்றி
பெண்கருப்பை இருட்டறைக்குள் பிறைநிலவாய் வளர்ந்தவளே
மண்கருப்பை இருட்டறைக்குள் மறுபடி ஏன் சென்றுவிட்டாய்;
சீறடியில் மண் ஒட்ட சினக்கின்ற நான் தானா
ஈரடியில் குழிவெட்டி இறக்குதற்கு சம்மதித்தேன்”
என்னும் அவரின் உருக்கமான கவிதை “கனவு மலர்கள்” தொகுதியில் இடம்பெற்றிருந்தது.
அவருடைய “வெளிச்ச விரல்கள் ” தொகுதி பல்வகைப்பட்ட பாடுபொருட்களைக் கொண்டது.
“வெளிச்ச விரல்கள் தொடமுடியாத வெட்ட வெளிக்கெல்லாம்-நம்
ஒளிச்சிறகாலே உயிரொளி தருவோம் சிறகை விரியுங்கள்”
என அதன் முகப்புக் கவிதை சொல்லும்.
புதுக்கவிதையின் பொருளடர்த்தியை மரபில் புகுத்தியவர்களில் இவரும் ஒருவர். சொக்க வைக்கும் சொல்லாட்சி இளந்தேவன் கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம்.
“கரையும் போது காக்கைகளுக்கு
வாயும் பிளக்கும் வாலும் பிளக்கும்”
என்பது போன்ற அழகிய அவதானிப்புகளை இவர் கவிதையில் காணலாம்.
“சொல்லை சிந்திப்பவன்
மரபுக் கவிஞன் ஆகின்றான்
பொருளை சிந்திப்பவன்
புதுக்கவிஞன் ஆகின்றான்
இரண்டையும் சிந்திப்பவன்
இளந்தேவன் ஆகின்றான்”
என்பது இவரின் சுய தரிசனம்.
முதிர்கன்னிகள் பற்றி தொண்ணூறுகளிலேயே அழுத்தமான கவிதை வடித்தவர்
“இவர்கள்
கன்னஈரத்தில் காவியம் படைக்கும்
ஜன்னலோரத்துச் சந்திரோதயங்கள்;
——–
இதோ ஓ இந்தச் சீதைகளுக்கு
அப்பன் வீடே அசோகவனம்தான்
——
இப்பொழுதெல்லாம் இந்தக் கன்னி
அடுப்பில் எரிப்பது விறகா? அல்ல..
ஆசைகளைத்தான் அப்படி எரிக்கிறாள்”
——
இவை,அந்தக் கவிதையின் சில பகுதிகள்.
கவிதையழகும் வசீகரக் குரலுமாய் கவியரங்குகளில் இவர் கவிதை பாடத் தொடங்கினால் வெண்கலக் கடையில் யானை புகுந்த கதைதான்.
“ஆற்றுக்கு நரைவிழுந்தால் கரையோரத்தின்
அருகம்புல் கைத்தடியாய் பற்றிக் கொள்ளும்
கூற்றுக்கு நரை விழுந்தால்?? எருமை மாட்டுக்
கொம்புதனை கைத்தடியாய் பற்றிக் கொள்ளும்”
என்னும் வரிகளை இவர் உச்சரிக்கும் போதெல்லாம் அரங்கம் கரவொலியில் அதிரும்.
போதையிலே சிலருக்குக் கவிதை தோன்றும்
பொடிமட்டை யால்சிலர்க்குக் கவிதை தோன்றும்
பாதையிலே தேர்போலப் போகும் பெண்ணை
பார்க்கையிலே பலபேர்க்குக் கவிதை தோன்றும்
வாதையிலே சிலருக்குக் கவிதை தோன்றும்
வருத்தத்தில் சிலபேர்க்குக் கவிதை தோன்றும்
ஏதெனக்குத் தந்தாலும் கவிதை தோன்றும்
இனிப்பொன்று தந்துவிட்டால் கவிதை தோன்றும்”
என்பார்.
உண்மைதான். எனக்குத் தெரிந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயை உச்சத்திலேயே வைத்திருந்த விசித்திரமான மனிதர் அவர்.
“எனக்கு எப்போதும் சர்க்கரை 400 ல் இருக்கும்.அந்த மயக்கத்திலேயே இருப்பேன்” என்று சாதாரணமாகச் சொல்வார்.
தொண்ணூறுகளின் தொடக்கம் என்று கருதுகிறேன். மயிலாடுதுறை அருகிலுள்ள மணல்மேட்டில் ஒருகவியரங்கம்.இலண்டனில் வாழும் கோயில் குருக்கள் தன் சொந்த ஊரில் ஏற்பாடு செய்திருந்தார்.குருக்கள் வீட்டுச் சிற்றுண்டி என்றால் கேட்கவா வேண்டும்!
நெய்யொழுக முந்திரி மின்ன கேசரியைத் தட்டில்வைத்து கூடவே சூடான உளுந்து வடையும் வைத்தார்கள்.
இளந்தேவன் பதறிப்போய் “இதை எடுங்க,இதை எடுங்க” என்றார்.
பரவாயில்லையே என்று பார்த்தால் உளுந்து வடையை எடுக்கச் சொல்கிறார்.
“கேசரின்னா சிங்கம்.அதுக்குப் பக்கத்தில வடையை வைச்சா கேசரிக்கு அவமானம்” என்றவர் ஒருமுறைக்கு இரண்டுமுறை கேசரியை கேட்டு வாங்கி உண்டார்.
“இவர்கள்” என்னும் தலைப்பில் ஒரு கவிதைத்தொகுதி.அருளாளர்கள்,அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என எல்லோரைப் பற்றியும் எழுதியிருப்பார்.அந்தத் தொகுதியில் யோகி ராம்சுரத்குமார் பற்றி அபாரமான ஒரு கவிதை உண்டு.
யோகியையும் தன்னையும் ஒப்பிட்டு “நீ-நான்” என்ற வரிசையில் உருவகங்களாக அடுக்கியிருப்பார்.
“நீ -தாகம் எடுக்கும் ஆறுகளுக்கும் தண்ணீர் தருகிற வானம்
நான் -தரையிலிருந்தே அதிலே கொஞ்சம் தாங்கிக் கொள்கிற ஏனம்
நீ-மோகம் பிறக்கும் மூடர்களுக்கும் முத்தம் தருகிற காற்று
நான் – முள்ளின் நடுவே சிக்கிக் கிடந்து முளைக்கத் தொடங்கும் நாற்று
நீ-விசிறிக்காம்பை செங்கோல் ஆக்கிய விசித்திரமான யோகி
நான் – வீசும் காற்றில் வெம்மை சேர்த்து வேகும் ஒருசுக போகி
நீ- இரவைப் பகலாய் மாற்றப் பிறந்த இந்திர ஜாலக் கிழவன்
நான் – இருட்டுப் பசுவில் வெளிச்சப் பாலை கறக்க நினைக்கும் சிறுவன்
என்பவை அந்த அழகிய கவிதையின் சில துளிகள்
ஒரு கவியரங்கில்
“பீத்தோவன் இசையினிலே பொங்குகிற பேரின்பம்
பாத்தேவன் இளந்தேவன் பாடலிலே ஒலிக்கிறது”
என்றேன். கவியரங்கில் அவர் பாடினால் கச்சேரி கேட்டது போல் இருக்கும்.
மான்களுக்கும் கோபம் வரும் என்ற தலைப்பிலான என் கவிதைத் தொகுதிக்கு அழகிய வாழ்த்துக் கவிதை தந்தார். ஒரு நதியின் மரணம் என்ற தன் கவிதைக்கு என்னிடம் ஒரு திறனாய்வுக் கட்டுரையை கேட்டு வாங்கி வெளியிட்டார்.
மலேசியாவில் கம்பன் விழா. கவியரங்கத் தலைமைக்கு இளந்தேவன் தான் வேண்டும் என்பதில் அமைச்சரும் கம்பன் கழகத் தலைவருமான டத்தோ சரவணன் உறுதியாக இருந்தார். நல்ல பல்வலியுடன் வந்தார்
“சொல்வலிக்க மாட்டாமல் சுகக் கவிதை தருபவரே
பல்வலிக்கு மத்தியிலும் பாட்டரங்கம் வந்தவரே”
என்றுசிநேகமாய் சீண்டினேன்.
கன்னத்தில் வைத்த கரம் கவிஞன் சிந்தனைக்கு
சின்னமென அவையோர் சொல்லட்டும் என்றிருந்தேன்
அண்மையிலே இருந்தபடி அவதிநான் படுகின்ற
உண்மையினைப் போட்டு உடைத்தீரே ”
என்று பதில் கவிதை பாடினார்.
அதன் பின் ஈஷா யோகமையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். கடும் நோயிலிருந்து மீண்டிருந்தார். மறைந்த தன் அன்னைக்கு காலபைரவ கர்மா செய்ய வந்திருந்தார். அதன்பின் அவரை சந்திக்க வாய்க்கவில்லை.
அவர் கலந்து கொண்ட கவியரங்குகளின் ஒலி ஒளிப்பதிவுகளை யாராவது திரட்டினால் நல்லது.
நான் மிகவும் மதித்த கவிஞர் இளந்தேவன் அவர்களுக்கு என் உளம் நெகிழ்ந்த அஞ்சலி.
அவரின் நீங்கா நிழலாய் உடனிருந்த திருமதி சந்திரகாந்தி இளந்தேவன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரியப்படுத்துகிறேன்