மிகச் சரியாக அதே கண்ணோட்டத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளிலும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையில் “கண்ணன்” என்ற தத்துவத்தின் மிக நுட்பமான அம்சங்கள் வெளிப்படுகின்றன.
தன்னளவில் முற்றிலும் விடுதலையான கண்ணனைப் போல் இந்த மண்ணில், இத்தனை ஆண்டுகளில் இலட்சக்கணக்கானவர்கள் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்-? இதற்கு ஓஷோ ஓர் உவமை சொல்கிறார்.
ஐம்பது செடிகள் கொண்ட நந்தவனத்தில், ஐம்பதுமே பூத்தால்தான் தோட்டக்காரனின் பராமரிப்பு துணை செய்திருப்பதாக அர்த்தம். ஒன்றிரண்டு வேண்டுமானால் பட்டுப்போகலாம். ஆனால், இந்த சமூகம் என்கிற நந்தவனத்தில் பெரும்பாலான செடிகள் பட்டுப்போகின்றன. ஒன்றிரண்டு மட்டுமே பூக்கின்றன. ஏனெனில் மனிதர்களுக்குள் திணிக்கப்படும் சட்டதிட்டங்கள், போலிமரபுகள் ஆகியவை தோட்டக்காரர்களின் தோல்வியையே காட்டுகிறது” என்கிறார்.
விழிப்புணர்விலும், சுதந்தரத்திலும் ஞானம் மலர்வதற்கான சூழல் வேண்டுமெனில், வாழ்க்கையை இயல்பாகவும் எளிதாகவும், அந்த விநாடிக்குரிய இயல்பிலும் ஏற்றும் கொள்ள வேண்டும் என்கிறார் ஓஷோ.
“If someday mankind consents to accept life as it is, simple, natural and spontaneous; if people give up imposing unnatural and impossible moralities on themselves, than hundreds and thousands of krishnas will walk on this earth” என்கிறார் ஓஷோ.
பாரதியின் கண்ணன் பாட்டு, கண்ணனின் பன்முகத் தன்மைகள் குறித்த பதிவுகளாக மட்டும் இல்லாமல் அதன் உட்பொருளை உணர்த்தும் விதமாகவும் இருப்பதை, ஓஷோவைப் புரிந்து கொள்ளும் போது நமக்கு இன்னும் தெளிவாகப் புலனாகிறது.
ஓஷோவைப் படிக்கும் போது பாரதியும், பாரதியைப் படிக்கும் போது ஓஷோவும் நமக்கு இன்னும் தெளிவாகப் புரிபடுகிறார்கள் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.
எனவே, ஓஷோ, பாரதி ஒப்பீடு என்கிற எல்லையோடு நின்றுவிட்டாமல், இருவரின் கண் கொண்டும் கண்ணனைக் கண்டு கொள்கிற முயற்சியாகவே இந்தப் புத்தகம் எழுதப்படுகிறது.
பாரதியும் சரி, ஓஷோவும் சரி, வாழும் காலத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதவர்கள். அது மட்டுமா-? சமூகத்தின் ஒரு பகுதியால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள்.
கண்ணனை உணர்வதில் எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் கொண்டிருக்கும். ஒருமித்த சிந்தனை தத்துவ உலகின் மறைமுகப் பிரதேசங்கள் மீதெல்லாம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)