கண்ணன் பாட்டு விதை விழுந்த விதம்
கண்ணன் பாட்டின் கட்டமைப்பைப் பார்க்கிற போது, அவை தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு போலத் தோன்றும். ஆனால், முதல் பாடல், “கண்ணன் என் தோழன்” என்கிற தலைப்பில், அர்ச்சுனனுடைய குரலில் ஒலிக்கிறது, கண்ணனை பாரதி தோழனாக பாவித்துப் பாடுகிறான் என்று கருத இதில் இடமில்லை.
“பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதினைப்
புறம் கொண்டு போவதற்கே & இனி
என்ன வழியென்று கேட்கில் & உபாயம்
இருகணத்தே உரைப்பான்”
என்று தொடங்குகிறது கண்ணன் பாட்டு, அப்படியானால் முதல் பாடல் மட்டும் தான் அர்ச்சுனனின் குரலா என்கிற கேள்வி எழுவது இயற்கை.
கண்ணன் பாட்டு முழுவதுமே அர்ச்சுனனின் நிலையிலிருந்து எழுதப்பட்டது தான். கண்ணனை நண்பனாக தந்தையாக&காதலனாக எல்லாம் காண்பதற்கு பாரதிக்கு சொல்லித்தந்ததே அர்ச்சுனன் தான். இப்படி-? இதை இந்த அத்தியாயத்தில் விரிவாக சிந்திக்க இருக்கிறோம்.
கண்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடுவில் நிலவிய உறவு தோழமை மட்டும் தானா என்றால், இல்லை. அவர்கள் மத்தியில் இருந்த உறவு பலவகையாய் விரிந்து, வளர்ந்து, அர்ச்சுனனே எதிர்பாராத எல்லைகளை எட்டியது.
இது குறித்து இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமேயானால் கீதை போதிக்கப்பட்ட சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும்.
கீதை, கண்ணன் நிகழ்த்திய சொற்பொழிவன்று. களத்தில் நிகழ்ந்த வாக்குவாதம். “இந்த கௌரவர்களுக்காக யாரெல்லாம் போர் புரிய வந்திருக்கிறார்களென்று பார்க்க வேண்டும். ரதத்தை நடுவில் கொண்டு நிறுத்து” என்று சாரதிக்குச் சொல்கிறான் பார்த்தன்.
எதிர்வரிசையில் தன் உறவினர்கள் நிற்பது கண்டு அர்ச்சுனன் மனம் அல்லல் உறுகிறது. அவனது புலம்பல் தொடங்குகிறது. அப்போது கூட அர்ச்சுனன் கண்ணனிடம் தன் ஆலோசனை எதுவும் கேட்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமா? ரத்த பந்தம் குறித்தும், சொர்க்கம்&நரகம்&பாவம்&புண்ணியம் குறித்தும் கண்னனுக்கே உபதேசம் செய்கிற தொனியில்தான் அர்ச்சுனன் பேசுகிறான். வில்லையும் அம்பையும் வீசிவிட்டுத் தேர்த்தட்டில் அமரும் அவனிடம் கண்ணன் பேசத் தொடங்குகிறான்.
கீதையின் இரண்டாவது அத்தியாயமாகிய சாங்கிய யோகத்தில், தன்னை சீடனென்றும் தான் கண்ணனிடம் சரணடைவதாகவும் அர்ச்சுனன் சொல்கிறானே தவிர அவனுடைய மனதில் அவநம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது.
உறவினனாகவும், தோழனாகவும் உரிமை பாராட்டிய அர்ச்சுனனால் கண்ணனின் கடவுட் தன்மையை அந்த நேரத்தில் உணர்ந்து சரணடைய முடியவில்லை. தன் கேள்விகளே பெரிதாகப்படுகிறது அவனுக்கு.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)