“வாழ்க்கைப் பாதையில் நொடிப் பொழுதுக்குள் நண்பன் பகைவனாக முடியும். பகைவன் நண்பனாக முடியும். நதி போல் நகரத் தெரிந்தவனுக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை”- என்கிறார் ஓஷோ.
‘A person who lives his life like a river makes neither friends, nor foes. he accepts whatever life brings’. (373)
பாரதிக்கும் இதே பார்வைதான்.
“இப்படியன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்” என்று வகைப்படுத்த முடியாததல்லவா கடவுட்தன்மை. இதற்கும் ஓஷோ அழகானதோர் உவமை சொல்கிறார். “ஒரு ரோஜா என்றால் ரோஜாதான். தாமரை என்றால் தாமரைதான். ஆனால் ஒரு மலரைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு விநாடி அது ரோஜாவாக மலர்கிறது. மறுவிநாடி அது தாமரையாகப் பூக்கிறது. இன்னொரு நேரம் மல்லிகையாக மணக்கிறது. அந்தக் கற்பனை மலரைப் போன்றவன் கண்ணன். கண்ணனை யாரோடும் ஒப்பிட முடியாது” என்கிற ஓஷோ அடுத்துச் சொல்கிற வாசகம் மிகவும் முக்கியமானது.
So, Krishna’s wholeness represents infinity. He is infinite” என்கிறார் (81). கண்ணனின் முழுமை, எல்லையின்மையின் அடையாளம். அங்கே ஒரே விதமான குணாதிசயத்தை எதிர்பார்க்க இயலாது என்ற ஓஷோவின் பார்வையை அப்படியே பாரதியிடமும் பார்க்க முடிகிறது.
“பெண்மைக் குணமுடையான் – சில நேரத்தில்
பித்தர் குணமுடையான் – மிகத்
தண்மைக் குணமுடையான் – சில நேரம்
தழலின் குணமுடையான்”
(கண்ணன் என் தோழன்)
“நாழிகைக் கோர் புத்தியுடையான் – ஒரு
நாளிருந்தபடி மற்றோர் நாளினில் இல்லை”
(கண்ணன் என் தந்தை)
என்கிற வரிகள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
ஒரு நண்பன் சுபத்திரையைக் கவர்ந்து போக வழி கேட்டால் சொல்வான். ஆட்டங்கள் ஆடியும் பாட்டுகள் பாடியும் ஆறுதல் தருவான். கேலிச்சொல் பொறுப்பான் என்றெல்லாம் போகிற “கண்ணன் & என் தோழன்” என்கிற பாடல்,
“வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில்
மேவு பரம்பொருள் காண் – நல்ல
கீதை உரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடுவேன்” என்று நிறைவடைகிறது.
சைவத்தில், சுந்தரர் இறைவனை இவ்வாறு உணர்ந்தார். “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் & என்னுடைய தோழனுமாய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி” என்று பாடினார் அவர்.
கடவுளைப் பார்த்து “நண்பனே! நலம் சார்பண்பனே!” என்று அழைக்கிறார் வள்ளலார். இவர்கள் இருவரும் கடவுளுக்குள் இருக்கும் நண்பனைக் கண்டவர்கள்.
ஆனால் அர்ச்சுனனுக்கு, நண்பனுக்குள் இருக்கிற கடவுளைக் காணுகிற விதமாய் வாய்ப்பு அமைந்தது. அதற்கென்றே கீதை பிறந்தது. கண்ணனை அவனது சுய வடிவில் ஓஷோ காண்கிறார். அர்ச்சுனனின் மனநிலையிலிருந்து “கண்ணனின் சுயத்தை” பாரதி தரிசிக்கிறான்.
ஓஷோவிடம் சீடெரொருவர் ஒரு கேள்வி கேட்கிறார். “கண்ணன், நிபந்தனைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் உட்படாதவன் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், அதர்மம் தலைதூக்கும் போது அதனை அழிப்பதற்காக யுகந்தோறும், யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொல்கிறான். அப்படியானால், குறிப்பிட்ட நோக்கமும் இலட்சியமும் கண்ணனுக்கு உண்டுதானே” என்பது கேள்வி.
அதற்கு ஓஷோ சொல்லும் பதில், அழகானது. “எந்த நிர்ப்பந்தமும் இல்லாதவர்தான் இப்படிச் சொல்ல முடியும். ஒரு மனிதரை சிறையிலடைத்துவிட்டு, “நாளை வா” என்றால் அவரால் வர முடியுமா-? மனிதர்களின் பிறப்பும் இறப்பும் கூடக் கர்மவினைகளின் கட்டுக்களைப் பொறுத்தே அமைகிறது. எனவே சராசரி மனிதர்களால் இப்படியரு வார்த்தையைச் சொல்ல முடியாது. முழுமையான சுதந்திரத்தில் இருப்பவரால் தான், நினைத்தபோது வர முடியும்” என்கிறார். (168)
தன்னுடைய வருகை தேவையென்று கருதினால் வந்தே தீருவான் கண்ணன் என்கிற ஓஷோவின் விளக்கத்தை உள்வாங்கி கொண்டு, பாரதியிடம் வருகிறோம்.
“அழைக்கும் பொழுதினில் போக்கு சொல்லாமல்
அரை நொடிக்குள் வருவான்;
மழைக்குக் குடை பசி நேரத்து உணவு – என்றன்
வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்”
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)