நிறந்தனில் கருமை கொண்டான்
1970 அக்டோபர் நான்கு. கண்ணனைப் பற்றி குலுமணாலியில் ஓஷோவின் பதினெட்டாவது சொற்பொழிவு நடைபெறுகிறது. அப்போது ஒருவர் கேட்கிறார். “பற்றற்று வாழ்ந்தவன் கண்ணன் என்று சொல்கிறீர்கள். அப்படியரு வாழ்க்கை சாத்தியமா” என்று.
இது குறித்த நீண்டதொரு விளக்கமளிக்கிறார் ஓஷோ.
“கண்ணனைப் பொறுத்தவரை பற்றற்ற தன்மைதான் மனித இயல்பு. மனிதன், தன் இயல்பிலிருந்து மாறிப்போய் தான் பற்றுகளுக்குள் சிக்குகிறான். பற்று உஷ்ணம் என்றும் வெறுப்பு குளுமை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை சுட வைத்தால் சூடாகிறது. குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் குளுமை அடைகிறது. தண்ணீருக்கென்று தனி இயல்பு கிடையாது. உஷ்ணமே தண்ணீரின் இயல்பாக அதைக் குளிரூட்ட முடியாது. குளுமையே அதன் இயல்பென்றால் உஷ்ணப்படுத்த இயலாது.
கண்ணன் பிறரோடு நெருங்கியிருப்பது போலவோ தள்ளியிருப்பது போலவோ தோன்றுவதெல்லாம் மாயத் தோற்றங்களே. கண்ணன், கண்ணனாகவே இருக்கிறான்” இந்த விளக்கத்தை வழங்குகிற ஓஷோ, தனக்கேயுரிய பாணியில் ஓர் உவமையும் சொல்கிறார்.
“ஒரு கண்ணாடிக்கும் கேமராவுக்கும் இருக்கிற வித்தியாசம் அதுதான்! தன் முன் இருப்பவற்றின் பிம்பங்கள் கண்ணாடியில் பதிவாவதில்லை. விழிப்புணர்வில் உள்ள மனிதனும் அப்படித்தான். சகமனிதர்களோடு வாழ்ந்தாலும் அவர்களுடன் உறவு கொண்டு அதன் மூலம் சிக்கல்களை சந்திப்பதில்லை. அன்பு காட்டுவதும் அப்படித் தான். ஆனால் கேமரா அப்படியல்ல. தன் முன் வருபவற்றின் பிம்பத்தைத் தனக்குள் வாங்கிக் கொள்கிறது. கண்ணனின் வாழ்க்கை கண்ணாடியைப் போன்றது.”
இந்த விளக்கத்தை ரசித்துக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். கண்ணன் என் தந்தை என்று பாடுகிற பாரதி.
பிறந்தது மறக்குலத்தில் – அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது, பார்ப்பனருள்ளே – சில
செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு;
நிறத்தனில் கருமை கொண்டான் – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகள் உடையான் – உங்கள்
சூனியப் பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்”.
மறக்குலம் – இடைக்குலம் – பார்ப்பனர் – செட்டிமக்கள் என்று எங்கே இருந்தாலும் அந்த பாதிப்பு எதுவும் கண்ணனிடம் இல்லை.
“துறந்த நடைகள் உடையான்!” அத்துடன் நிறுத்தவில்லை பாரதி.
“இன்பத்தை இனிதெனவும் – துன்பம்
இனிதில்லை என்றும் அவன் எண்ணுவதில்லை”
என்றும் சொல்கிறான்.
இது எல்லையின்மையின் அடையாளம். ஆனால் மனித மனம் எல்லைகளுக்கு உட்பட்டதுதானே. கண்ணனை சில எல்லைகளுக்குள் வைத்தே பலரும் பார்க்கின்றனர். இது குறித்து ஓஷோ விரிவாகப் பேசுகிறார்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)