கண்ணனைத் தன் தந்தையென்று பாடுகிற பாரதி, கண்ணனின் மேன்மைகளைப் பாடிக் கொண்டு வருகிறபோதே,
“பல்வகை மாண்பினிடையே – கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு
நல்வழி செல்லுபவரை- மனம்
நையும் வரை சோதனை செய் நடத்தையுண்டு”
என்று பாடுவது கூர்ந்து நோக்கத்தக்கது. “மனம் நைகல்” என்பது மனம் நொந்து இறைவனை ஏசுவதல்ல. ‘தான்-தனது’ என்பன போன்ற எண்ணங்களுடன் மனதுக்கிருக்கும் கடைசி இழையும் நைந்து போகும் வரை என்பதை இதன் பொருள். இது தொடர்பாக ஓஷோ ஒன்றைச் சொல்கிறார்.
‘தான்-தனது’ எனபதைக் கடப்பதற்கு பற்றுகளை அறுப்பது’ என்று பலரும் பொருள் சொல்வதுண்டு. ஆனால், தான்-தனது என்கிற சிறிய எல்லைகளுக்குள் தன்னை அடையாளப்படுத்தும் வரை, எல்லையின்மையை உணரவழியில்லை.
“கண்ணனிடம் தனக்குத் துன்பங்களை வரமாகத் தருமாறு வேண்டிய பக்தரைப் பற்றிச் சொல்லும் போது, ‘துன்பம் என்ன அவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். தன்னை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டமையால் ஆனந்தத்தையே உணர்ந்த அவர், துன்பம் பற்றியும் உணர விரும்பி அவ்வாறு கேட்கிறார்” என்கிறார் ஓஷோ.
அவ்வாறு ‘துன்பத்தை’ உணர்ந்தவர்கள் துன்பமும் இன்பம் என்று தான் கருதுவார்கள். தீக்குள் விரலை வைத்தால், நந்த லாலாவைத் தீண்டும் இன்பம் தான் தோன்றும் அவர்களுக்கு. எனவே இன்பமும் துன்பமும் ஒன்று போல் தோன்றும் உயரிய பக்குவத்தை இது உணர்த்துகிறது.
“நல்வழி செல்பவரை சோதனை செய்வது” பைத்தியம்” என்பது போல் தோன்றும் என்றாலும் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பாரதிக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது.
தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்புக் கொடுத்தவர்களுக்குத் துன்பத்திலும் கடவுளைத் தான் உணர முடியுமே தவிர வலியையோ துன்பத்தையோ அவர்கள் உணர்வதற்கு வாய்ப்பில்லை.
இந்த அனுபவம்தான் பாரதியின் மற்றொரு தனிப்பாடலில்,
“காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே கண்ண பெருமானே – நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ண பெருமானே!”
என்று வெளிப்படுகிறது.
காயின் புளிப்பும் கனியின் இனிப்பும் தனித்தனி அனுபவங்கள் என்று மனம், தனது குறுகிய எல்லைகளில் நின்று பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லைகளில் நின்று பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லையின்மையின் அனுபவம் வாய்த்த பிறகு அவற்றில் இருப்பதும் கடவுட்தன்மை என்று புலனாகிறது.
கண்ணனைத் தன் தந்தையென்று கொண்டாடும் பாரதி, “நிறந்தனில் கருமை கொண்டான்” என்கிறான். இது குறித்தும் ஓஷோவிடம் கேட்கப்பட்டது.
கண்ணனின் நிறம் ஏன் கறுப்பாக இருக்கிறது என்றொரு கேள்வியாளர் ஓஷோவிடம் கேட்கிறார்.
இதற்கு ஓஷோ சொல்கிற பதில் நுட்பமானது. ஒரு மனிதன் வெவ்வேறு மனநிலைக்கேற்ப வெவ்வேறு நிறங்களைக் கொள்கிறான். அன்பில் ஒரு நிறம். அச்சத்தில் ஒரு நிறம் என்றும் மாறி வருகிறது. கண்ணனின் கறுப்பு நிறம் ஒரே சீரான இயல்பைக் குறிக்கும். மாற்றம் எத்தனை வந்தாலும் கண்ணனின் இயல்பு ஒன்றாகவே இருப்பதன் அடையாளம் கறுப்பு நிறம், கறுப்பு ஆழமான நிறம். ஆறு ஆழமாக இருக்கையில் கருநிறமாகவும் ஆழமாகவும இருக்கிறது என்று அடுக்கிக் கொண்டே போகிறார் ஓஷோ.
“வயது முதிர்ந்து விடினும் & எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை மூப்புமில்லை & என்றும்
சோர்வில்லை, நோயன்று தொடுவதில்லை
என்ற பாரதியின் வரிகளோடு நாம் இதனை ஒப்பு நோக்க முடிகிறது.
“கறுப்பே அழகு” என்கிற முதுமொழியும், “கண்ணன் என்றும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடந்தேனை” என்று பாடுகிற ஆண்டாளும் நம் நினைவுக்கு வருகின்றார்கள்.
கண்ணனே மேகவண்ணன்!
கடலெலாம் அவன்தன் மேனி!
விண்ணெலாம் அவன்மெய் நீலம்
விரிகின்ற கடலும் அன்னான்!”
என்று கண்ணதாசன் நம் காதுகளுக்குள் வந்து கவிதை பாடுகிறார். கடலும் ஆகாசமும் போலவே எல்லையில்லாத கடவுட்தன்மையே கண்ணனின் தன்மை என்பதை பாரதியும் ஓஷோவும் உறுதிப்படுத்துகிறார்கள்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)