‘கண்ணன் என் அரசன்’ என்று கண்ணனின் போர்த்திறம் பற்றிப் பாட வருகிறான் பாரதி.

“பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும்
பார்த்திருப்பது அல்லாமல் ஒன்றும் செய்திடான்!
நகை புரிந்து-பொறுத்துப்பொறுத்து-ஐயோ
நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் போக்குவான்!”

இந்த வரிகள், ஓஷோ சொல்கிற ஜூடோ கலையினை நமக்கு நினைவூட்டுகிறது.

இன்னொன்றையும் ஓஷோ சொல்கிறார். “கண்ணன் பகைவர்களை வெல்வதெல்லாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் நிகழ்ந்திருக்கிறது-? If Krishna won against his powerful enemies, the reason was that for him, fighting was a play,play-acting and fun”.

விளையாட்டும் நாடகமும் வேடிக்கையுமாய் கண்ணன் இருப்பது மற்றவர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்துகிறது, மண் மழைக்கு ஏங்குவது போல், நாம் அவன் யுத்தத்திற்கு ஏங்கினால், அவன் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறான் என்கிறான் பாரதி.

“வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்று இவண் போர்க்குத் தவிக்கவும்
தானம், கீர்த்தனை தாளங்கள் கூத்துகள்
தனிமை, வேய்குழல் என்று இவை போற்றுவான்”

என்று பாரதி பாடும்போது நம் வியப்பு வளர்கிறது.

சிசுபாலனை உரிய நேரத்தில் கண்ணன் கொன்றது பற்றிய ஓஷோவின் விளக்கத்தை ஏற்கெனவே பார்த்தோம். பாரதி சொல்கிறான் பாருங்கள்.

“காலம் வந்து கை கூடும்; அப்போதில் ஓர்
கணத்திலே புதிதாக விளங்குவான்”

நிகழ்காலத்தின் நிமிடமாய் அல்ல, கணமாகவே நிற்கிறான் கண்ணன். கண்ணன் கையிலுள்ள சக்கரம் பற்றியும் பேசுகிறான் பாரதி.

“சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்!
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்!
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ?
இதனுள்ளே பகை மாய்த்திட வல்லன் காண்”

‘இக் கணத்தில் இடைக்கணம்’
என்று பாரதி சொல்வது, ‘Fraction of the second’ என்பதைத்தான்.

காலத்தின் போக்கோடு முழுமையான ஒத்திசைவில் இருக்கிற மனிதனால் மட்டுமே அந்த விநாடிக்கு எது வேண்டுமோ அதை முழுமையாகச் செய்யமுடியும். “கணத்திலே புதிதாக விளங்குதல்” என்கிற இயல்பு பற்றித்தான் ஜென் மார்க்கம் விரிவாகப் பேசுகிறது.

கணத்திலே புதிதாக விளங்குகிறவன் மனதில் பகையுணர்ச்சி பாரமாக ஏறுவதில்லை.

ஒரு கருத்து வேறுபாடாக இருந்தாலும், களத்தில் ஏற்படுகிற மோதலாக இருந்தாலும், பகையுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் தான் பெரிய பாரங்களாகவும் சாபங்களாகவும் மனதை அழுத்தும்.

தலைவனாகவும் ரட்சகனாகவும் கருதப்படுகிறவன் செயற்கையாய்ச் செய்கிற சாகசங்கள் எதுவும் கண்ணனிடம் இல்லை, பிறரின் பழியுணர்ச்சியும் வன்மமும் அவனைத் தொடுவதில்லை. கண்ணனைப் பலரும் பகைவரென்று கருதலாம். கண்ணனுக்குப் பகைவர்கள் இல்லை.

கண்ணனின் தெளிந்த மனநிலை பற்றி ஓஷோ தரும் இன்னொரு விளக்கம் முக்கியமானது.

லாவோட்சு வாழ்வில் நடந்த ஓர் உரையாடலை மேற்கோள் காட்டுகிறார் ஓஷோ. லாவோட்சு சொன்னார். “என்னை யாரும் தோற்கடிக்க முடியாது” என்று, உடனிருந்தவர்கள் ஏனென்று கேட்டார்கள். நான் ஏற்கெனவே தோற்றுவிட்டவன்” என்றார் லாவோட்சு.

“விளையாட்டில் நாட்டமிருக்கும் அளவு வெற்றியில் குழந்தைகளுக்கு நாட்டமிருப்பதில்லை. கண்ணன், குழந்தைப் பருவத்தில் விளையாட்டாகவே அரக்கர்களை அழித்தான். வளர்ந்த பிறகும் அவனது செயல்கள் அச்சமுற்றவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. ஆனால் அவன் இயல்பாகவே வென்றான்” என்கிறார் ஓஷோ.

“It has to be remembered that krishna is not aggressive. he is not on a mission of conquest”. (274)

“The secret of krishna’s victory over his very powerful adversaries lies in his being a child, soft and weak. (275) என்கிற ஓஷோவின் கருத்துகள் பாரதிக்கு உடன்பாடா என்று பார்க்க வேண்டும்.

“படைகள் சேர்த்தல், பரிசனம் சேர்த்திடல்
பணம் உண்டாக்கல், எதுவும் புரிந்திடான்
இடையன்; வீரமில்லாதவன், அஞ்சினோன்
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்”
“நாம் அவன் வலி நம்பியிருக்கவும்
நாணமின்றிப் பதுங்கி வளருவான்”

—– ——
—— ——–

மந்திரத் திறனும் பல காட்டுவான்
வலிமையின்றிச் சிறுமையில் வாழ்குவான்”

பாரதியின் இந்தக் கருத்துகள் ஓஷோவின் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. வன்முறையாளன், மாய்மாலக்காரன் என்றெல்லாம் கண்ணன் மீது கட்டமைத்திருக்கிற பிம்பங்கள் தகர்கின்றன.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *