சீடனாய்… சேவகனாய்
ஜெயகாந்தன் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று குருபீடம். சோம்பலும் அலட்சியமும் திமிர்த்தனமுமாய் வாழ்கிற பிச்சைக்காரன் ஒருவன் அந்த ஊரின் வீதிகளில் திரிவான். ஒருநாள், கண்களில் வெளிச்சமும், நெற்றியில் திருநீருறுமாய் ஓர் இளைஞன் அவனை வந்து வணங்குவான். தன் குரு அந்தப் பிச்சைகாரன்தான் என்று கனவில் கண்டு கொண்டதாகவும் அவனுக்குத் தொண்டு செய்வதே தன் கடமை என்றும் அந்த இளைஞன் சொல்வான். நாளடைவில் பிச்சைக்காரனுக்கு ஊரெங்கும் புகழ் கூடும். அவனுடைய வாழ்க்கை மாறும். ஒரு நாளில் சில நுட்பமான வி-ஷயங்களை விளங்க வைத்துவிட்டு அந்தச் சீடன் காணாமல் போய்விடுவான். சீடனென்று சொல்லிக் கொண்டு வந்தவன் தான் குரு என்பதை அந்தப் பிச்சைக்காரன் உணர்ந்து கொள்வான்.
யார் குரு? யார் சீடன்? என்பது அவரவர் தன்மைக்கேற்ப மாறுபடுகிற விஷயம். குருவாகக் கருதப்பட்டவரே தன் சீடரை குருவாக ஏற்றுக் கொண்ட சம்பவம், ராமானுஜர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
சைவமரபில், முருகனைத் “தகப்பன் சாமி” என்று கொண்டாடுகிற வழக்கமும் இதனையே சூட்சுமமாக உணர்த்துகிறது.
தங்களுக்குள் பக்திபூர்வமான இயல்பு கொண்டவர்கள்தான் தங்களுக்குள் கடவுட் தன்மையை உணர முடியும் என்பதை, கண்ணனைப் பற்றிப் பேசும் போது ஓஷோ மிக விரிவாக விளக்குகிறார்.
“ஒருவர் மேல் செலுத்தப்படக்கூடியதுதான் ‘பக்தி’ என்றில்லை. தன்னுள் பக்திபூர்வமான இயல்பு ஒருவருக்குப் படிந்து விடுமேயானால், அவர் எல்லா உயிர்களிலும் கடவுளைக் கண்டுணர்வார். தன்னிலும் கடவுளைக் கண்டுணர்வார். பெரும்பாலான குருமார்கள், தொடங்கும்போதே, தான் கடவுள் என்று பிரகடனம் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தங்களுக்குள் கடவுளைப் பார்க்க முடிகிறது. ஆனால், பக்கத்தில் இருப்பவர்களைக் கடவுளாகப் பார்க்க முடிவதில்லை. சீடனாகத்தான் பார்க்கிறார்கள்.
கண்ணனுக்கு யார் மீது பக்தி இல்லை. ஆனால் பக்திபூர்வமான இயல்பு உண்டு. கண்ணனால் எல்லா உயிர்களிலும் தன்னைக் காண முடிகிறது. அதனால்தான், பார்த்தனுக்கு சாரதியாகவும் வரமுடிகிறது. தன் பக்தனுக்குக் கீழே தேரோட்டியாகவும் உட்கார முடிகிறது” என்கிறார் ஓஷோ. (365)
ஒருவர், தன்னை குருவாகக் கருதிக் கொள்ளலாம். ஆனால் அவரது தன்மை என்னவோ அதுதானாக வெளிப்பட்டுவிடும். ஒருவரை ஆட்கொள்வதற்கு வழி, அவருடைய சீடனாகவோ சேவகனாகவோ போவதுதான் என்றால், அதில் கண்ணனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
குற்றவாளியைக் கைது செய்யப் போகும் காவல்துறையினர்கூட, குற்றவாளியின் உதவி தேடிச் செல்பவர்கள் போல மாறுவேடத்தில் போகிறபோது, ஆட்கொள்ள வருபவனுக்குத் தயக்கம் இருக்குமா என்ன?
இதை இன்னும் தெளிவுபடுத்தும் விதமாக ஓஷோவுக்கும் அவர் சீடர்களுக்கும் ஓர் உரையாடல் நடைபெறுகிறது. “ஊடகமும் செய்தியும் ஒன்றுதான்” என்று மேக்லூஹன் சொல்கிறார்.MEDIUM IS THE MESSAGE என்ற அந்த சொற்றொடரைக் கண்ணனுடன் பொருத்தி விளக்குமாறு சீடர் கேட்கிறார்.
ஓஷோ அது குறித்தும் பேசுகிறார். “பொதுவாகவே, மனிதமனம் எதையும் பிரித்துப் பார்க்கிற இயல்புடையது. ஊடகம் வேறு செய்தி வேறு என்று சிந்திக்கும். ஆனால் ஊடகமும் செய்தியும் ஒன்றுதான். உலகமும் செய்தியும் ஒன்றுதான். உலகமும் கடவுளும் ஒன்றுதான். நடனம் வேறு, நடனமாடுபவர் வேறு என்று பொருளல்ல.
கண்ணனின் பாஞ்சசன்யம் இதைத்தான் உணர்த்துகிறது. போர்க்களத்தில கண்ணன் பாஞ்சசன்யத்தை முழக்கினான் என்றால் என்ன அர்த்தம்? தன் ஐந்து புலன்களும் பொருந்த, முழுமையாகப் போர்க்களத்தின் சூழலில் ஈடுபட்டான் என்பதைத்தான் அது குறிக்கிறது. இங்கே பாஞ்சசன்யம் என்கிற ஊடகத்தில் கண்ணன் முழுமையாகப் பொருந்தியிருக்கிறான். அதை தனிப்பொருள் என்று பார்க்க முடியாது. பாஞ்சசன்யம் கண்ணனின் நீட்சியாகவே நிற்கிறது.
உங்களை நான் ஒரு குச்சியால் தொடுகிறேன் என்றால், அந்தக் குச்சி என் கைகளின் நீட்சி. ஆகாயத்தைத் தொலைநோக்கியின் துணை கொண்டு பார்த்தால் அந்தத் தொலை நோக்கியும் என் கண்களின் நீட்சி” என்று விளக்குகிறார் ஓஷோ. (286-290)
எனவே, சீடனென்று வந்தாலும், சேவகனென்று வந்தாலும் கண்ணனின்ன கடவுட் தன்மைதான் வெளிப்படுகிறது. தன்னுள் மட்டும் கடவுளைக் கண்டு, அடுத்த உயிரில் கடவுளைக் காணாமல் சீடனை மட்டும் காண்கிறவர்கள் அரைகுறை குருமார்கள். இந்தச் செய்தியை ஓஷோவின் பார்வையில், பார்த்தோம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)