இனி, இப்படியரு குருவாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் பாரதி. அவனிடம் சீடனாக வந்து சேர்கிறான் கண்ணன்.
கண்ணன், இந்த குருவைக் காண வரும்போது, அவனைவிட அறிவில் குறைந்தது போலவும், குருவின் தொடர்பால் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறவன் போலத்தான் வந்து சேர்கிறான்.
“என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்
என் நடை பழகலால், என் மொழி கேட்டலால்
மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும்,
யான் சொலும் கவிதை, என் மதி அளவை
இவற்றினைப் பெருமை இலங்கின என்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன்
சீடனாய் வந்தெனைச் சேர்ந்தனன்” என்கிறான்.
இப்படியரு சீடன் கிடைத்தால்விட முடியுமா என்ன? அவனை உயர்த்தியே தீர்வது என்ற முடிவோடு இந்த “குரு” வழிகாட்டத் தொடங்குகிறார்.
“இன்னது செய்திடேல்; இவரொடு பழகேல்;
இவ்வகை மொழிந்திடேல்; இனையன விரும்பேல்;
இன்னது கற்றிடேல்; இன்ன நூல் கற்பாய்;
இன்னவர் உறவு கொள்; இன்னவை விரும்புவாய்”
என்றெல்லாம் உபதேசம் நடக்கிறது. கண்ணனோ, இவற்றுக்கெல்லாம் எதிராக நடக்கிறான். எல்லோரும் ‘கிறுக்கன்’ என்று ஏளனம் புரியும் விதமாய் நடந்து கொள்கிறான். குருவால் இதனைத் தாங்க முடியும்-?
“முத்தனாக்கிட நான் முயன்றதோர் இளைஞன்
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என்
நெஞ்சினை அறுத்தது”
அவ்வளவுதான்! உபதேசங்கள் வலிமையடைந்தன. சாம பேத தான தண்டங்களைப் பயன்படுத்தியும் எந்தப் பயனும் விளையவில்லை.
“கண்ணன் பித்தனாய்க் காட்டாளாகி” நிற்கிறான்.
ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. “என் முகத்தில் விழியாதே! போ!” என்று ஏசிவிடுகிறான் குரு!
கண்ணன் எழுந்து செல்கிறான். “உன்னைத் திருத்த நினைத்துத் தோற்றேன்” என்று ஒப்புக்கொள்கிறபோது, குருவின் துயர் நீங்கி அமைதி ஏற்படுகிறது.
உடனே கண்ணனாகிய சீடன் மீண்டும் தோன்றி, குரு சொன்னதையெல்லாம் செய்து, நல்ல சொல் சொல்லி, ‘சட்டென்று’ மறைகிறான். மறைந்தவன் குருவின் மனதில் மறுபடி தோன்றி குருவுக்கு உபதேசம் செய்கிறான்.
“மகனே! ஒன்றை ஆக்குதல், மாற்றுதல்
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண்;
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகில் வேண்டிய தொழில்எலாம்
ஆசையும், தாபமும், அகற்றியே புரிந்து
வாழ்க நீ” என்றான்!”
இதுதான் கண்ணன் சீடனாய் வந்த கதை. தன்னிடம் வருகிற சீடனுக்குள் கடவுளைக் காணும் பக்குவமில்லாத குரு பட்ட பாட்டினை பாரதி எழுதுகிறான்.
தன்னுடைய அனுபவத்தில் தெளிவையோ, நிலையான மகிழ்ச்சியையோ உணராமல், ஊரார் பார்வைக்குத் தன்னை “குரு” என்று உணர்த்த விரும்பிய தவற்றுக்கு தண்டனையாகவே கண்ணன் சீடனாக வருகிறான் என்கிறான் பாரதி.
“தான் அகம்சுடாதேன், பிறர்தமைத் தான் எனும்
சிறுமையின் அகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுளே தெளிவும், சலிப்பிலா மகிழ்ச்சியும்,
உற்றிடேன்-இந்தச சகத்திலே உள்ள
மாந்தர்க்கு உற்ற துயரெலாம் மாற்றி
இன்பத்து இருத்தவும்&எண்ணிய பிழைக்கு, எனைத்
தண்டனை புரிந்திடத் தானுள்ளம் கொண்டு
மாயக் கண்ணன் வலிந்து எனைச் சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்
பற்பலவாய் அகப் பற்று உறச் செய்தான்”
ஓஷோவும் பாரதியும் கண்ணனை மிக நுட்பமாக உணர்த்தும் மற்றுமொரு கோணம் இது.
கண்ணனை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு ஓஷோ இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டி விளங்குகிறார்.
குருஷேத்திர யுத்தத்தில் பார்த்தனுக்கு சாரதியாய் வருகிற கண்ணன், ஒவ்வொரு நாளும் யுத்தம் முடிந்தும் குதிரைகளை நதிக்கரைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி, இதமாகப் பிடித்துவிடவும் செய்கிறான்.
ஒரு குதிரைக்குள்ளும் கடவுளைக் காண்கிற பக்குவம் வாய்க்கப் பெற்ற கண்ணன், தன்னைச் சேவகனாக்கிக் கொள்கிறான். ஒரு பக்தனை ஆட்கொள்ளக் கடவுளாக மட்டுமல்ல, தேவைப்பட்டால் சீடனாகவும் சேவகனாகவும் வரக் கூடியவன் கண்ணன் என்பது நமக்கு விளங்குகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)