ஊடகமே செய்தி என்ற மேக்லூஹனின் சிந்தனையை ஓஷோ கண்ணனுடன் பொருத்திக் காட்டியதை நினைவுபடுத்திக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். ஒருவனுக்கு நல்ல சேவகன் அமைய அமையாமல் தவிக்கும் போது கண்ணன் சேவகனாகவும் வருகிறான். வந்தவன் வெறுமனே கூலிக்குப் பணி செய்து விட்டுப் போகிறவனாய் இல்லை.
என்ன பெயர்? என்று கேட்டால் “ஒன்றுமில்லை” என்று பதில் வருகிறது. பெயர்களுக்குள் அடங்காத பிரம்மாண்டம், சேவகனாக எளிவந்த தன்மையில் நிற்கிறது. சேவகனாக வருகிற கண்ணனின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக இந்தப்பாடல் இருக்கிறது. குறிப்பாக மூன்று வரிகள்
மாடுகன்று மேய்த்திடுவேன் – மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
கோகுலத்தில் மாடு கன்று மேய்த்ததும், கோவர்த்தன கிரியை ஏந்தி மக்களைக் காத்ததும், வீடு பேற்றும் வழிகாட்டி, ஞான விளக்கேற்றியதும், பாண்டவர்கள் சொன்னபடி கேட்டு தூது நடந்ததும், பாஞ்சாலிக்குத் துகில் கொடுத்ததும் என்றெல்லாம் இந்த வரிகளுக்கு நாம் பொருள் கொள்ள முடியும்.
இப்படி வந்தாலும் கண்ணன், ஒரு சேவகனாகவே செயல்படுகிறான்.
“கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான். வாய்முணுத்தல் கண்டறியேன்;
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்தம் ஆக்குகிறான்;
தாதியர் செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயம் காட்டுகிறான்; ஒன்றும் குறைவின்றிப்
பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால் வாங்கி மோர்வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போல் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்”
என்கிறான் பாரதி.
சேவகனாக வந்து நிற்கிறபோது, தேவரீர் ஆதரித்தால் போதும் அடியேனை என்று கண்ணன் சொன்னாலும், இங்கிவனையான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று விம்மிதம் அடைகிறான் பாரதி.
தன் சேவகனாய்க் கண்ணனை ஆட்கொண்ட பெருமிதம் அகன்று பாரதிக்கு ஓர் உண்மை புலப்படுகிறது.
கண்ணனை நான் ஆட்கொண்டேன்!
கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணன் எனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
ஆளாக வந்தவனே உண்மையில் ஆட்கொள்ளவந்தவன் என்பது புலனாகிறது. பாரதிக்கு சேவகன் என்ற போர்வையில் வந்தாலும் கண்ணனின் கடவுட்தன்மையல்லவா வெளிப்படுகிறது!
சீடன்-சேவகன் ஆகிய ஊடகங்களில் வந்தாலும் முழுமையைக் கண்ணன் உணர்த்துகிறான். இந்தப்புள்ளியில் மேக்லூஹன், ஓஷோ, பாரதி மூவருமே சந்தித்துக் கொள்கிறார்கள்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)