யார் குரு?

‘ரிஷிமூலம்’ என்று தேடிப்போகும் போது பெரும்பாலானவை அதிர்ச்சித் தகவல்களாகவே அமைந்துவிடுகின்றன. பண்டைய நாட்களில், ஞானம் முதிர்ந்த நிலையில் இறைத் தேடலின் உந்தலில் துறவு மேற்கொண்டவர்கள்தான் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும் வணங்கத்தக்க இடங்களில் இருந்தனர்.

பிற்காலத்தில், வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகள் – தோல்விகள் – போன்றவை துறவி நோக்கித் துரத்தின. அத்தகைய மனிதர்கள் தங்களுக்குள் அமைதியை உணராமல், துறவின் கோலத்தை பிழைப்புக்கான வழியாக வழியாக ஆக்கிக்கொண்டனர். இவர்களைப் பார்த்து ஆதிசங்கரர் “உதர நிமித்தம் பஹூக்ருத வேஷ” என்று இகழத் தலைப்படுகிறார்.

கனியின் கனம் கூடி காம்பிலிருந்து இயல்பாகக் கழன்று விழுவது போல் அமைவதுதான் தூய்மையான துறவு. இல்லறத்தில் இருந்து, பொருளீட்டி, பிறருக்கும் தந்து, இறையுணர்வு ஏற்பட்ட பிறகு உறவுகளைத் துறந்து போகிற போது அந்தத் துறவில் உண்மை இருக்கிறது.

“ஈதல் அறம், தீங்குன்றி ஈட்டல்பொருள்
காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு
பட்டது இன்பம்”
என்று பட்டியல் போடுகிற அவ்வையார்,
“பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு” என்கிறார்.

பரம்பொருள் என்கிற ஒன்றைப் பற்றிய பிறகு முதிர்ந்த ஞானத்தால் பற்றுக்களிலிருந்து நீங்குவது ஒருவகை. வாழ்க்கையின் கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் துறவை ஒரு தப்பித்தலாக மேற்கொள்வது இன்னொருவகை இத்தகைய துறவிகள் தாங்களும் அமைதியிழந்து, அந்தரங்கத்தில் ஆசைகளைச் சுமந்து, தங்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி விடுகிறார்கள்.

ஆனந்தத்தை உணர்ந்ததன் விளைவாக, தமக்குள் பரிபூரணத்தை அனுபவமாகக் கண்டதன் விளைவாக துறவிகளாகும் சிலர்தான், ஞானிகளாய், மனிதகுலத்தை உயர்த்தவல்ல மகான்களாய் விளங்குகிறார்கள். இப்படியிருப்பவர்கள் எத்தனைபேர் என்கிற கேள்வியை எழுப்புகிறார் ஓஷோ. வாழ்க்கையின் துக்கங்களிலிருந்து சந்நியாசம் கிளைவிடுமேயானால் அதிலிருந்து துக்கம்தான் படரும் என்கிறார்.

Rarely have you come across a person who took to sannyas out of life’s joys. An unhappy person, a person ridden with sorrow and pain, escapes into sannyas. No one comes to sannyas with a song in his heart.

இவர்களிலிருந்து கண்ணன் முற்றிலும் வேறுபட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிற ஓஷோ, கண்ணனைப் பின்பற்றி சந்நியாசம் மேற்கொள்ளப்படுமேயானால் வாழ்க்கை ஆனந்தத்தின் விளைவாக சந்நியாச வாழ்க்கை பிறக்கும் என்கிறார்.

Krishna is an exception to the rule. To me, he is that rare sannyasin whose sannyas is from out of joy and bliss. and one who chooses sannyas for the joy of it must be basically different from the general breed of sannyasins who come to it in misery and frustration.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் குருவா இல்லையா என்பதை, புறத் தோற்றத்தை வைத்துத்தான் பெரும்பாலும் நாம் தீர்மானிக்கிறோம்.

மகிழ்ச்சி மயமாக, ஆடல்பாடலுடன், ஒரு மனிதனைக் கண்டால் அவரிடம் ஞானம் நிலைபெற்றிருக்கும் என்றோ, அவரால் ஞானத்தை போதிக்க முடியும் என்றோ நாம் நினைப்பதில்லை.

குருவாக விளங்குவதற்கு புறத்தோற்றம் மட்டுமே அளவுகோல் அல்ல என்பதை இன்றைய நவீன குருமார்களைக் கொண்டு நாம் உணரத் தொடங்கியிருப்பது ஆறுதலான விஷயம்தான்.

ஆனால், ஒரு குரு இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நாமாக சில அளவுகோல்களை வைத்துக்கொண்டு அலைகிறோம்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *