உண்மையான குருமார்களைக் கோட்டைவிட்டு, வேடதாரிகளிடம் வீழ்ந்து போகிறோம். இதுகுறித்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும் எச்சரித்திருக்கிறார்.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்,
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே”
என்கிறார் அவர்.
பாரதி, கண்ணன் என்கிற குருவைப் பார்த்த மாத்திரத்தில் மனித மனதுக்குள் ஏற்படக் கூடிய எதிர்ப்புணர்ச்சியை அழகானதொரு கவிதைச் சித்திரம் ஆக்குகிறான்.
சாத்திரங்களையெல்லாம் தேடிபார்த்து, சலித்துப்போய், ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் ஆசையில் நாடெங்கும் சுற்றி வரும்போது ஒரு முனிவர் தென்படுகிறார். அவர் முகத்தில் ஒளி, கண்களில் தெளிவு. நீண்ட சடை. தாடி. இதையெல்லாம் பார்த்ததும் அவரைப்போய் வணங்கி, தனக்கொரு குரு தேவை என்று சொல்கிறான்.
அவர்தான் கண்ணனைப் பற்றிச் சொல்லி, அவனிடம் சரணடைந்துவிடுமாறும் சொல்கிறார். சொல்கிறபோதே கண்ணனைப் பற்றிய சரியான தகவல்களைத்தான் அவர் தருகிறார்.
“ -தம்பி
நின்னுள்ளத்திற்குத் தகுந்தவன் – சுடர்
நித்திய மோனத்து இருப்பவன் – உயர்
மன்னர் குலத்திற் பிறந்தவன் – வட
மா மதுரைப்பதி ஆள்கிறான் – கண்ணன்
தன்னைச் சரண் என்று போவையேல் – அவன்
சத்தியம் கூறுவன்” என்று சொல்லித்தான் அனுப்புகிறார்.
“நித்திய மோனத்து இருப்பவன்” என்கிற வரி ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
அவன் வடமதுரையை ஆள்பவனாக இருந்தாலும், தேரோட்டிக் கொண்டிருந்தாலும் நித்திய மோனத்தில் இருப்பவன் அவன்.
“எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே” என்பது உண்மையல்லவா!
இவ்வளவு சொல்லி அனுப்பியபோதும்கூட, ஞானமடைந்த ஒருவன் சராசரியாக வாழ்க்கையில் கொண்டாட்டமும் ஆட்டமும் பாட்டமுமாக இருப்பதை மனிதமனம் ஜீரணிக்க மறுக்கிறது. வடமதுரைப்பதி சென்று கண்ணனைப் பணிந்து தன் விருப்பத்தை சொன்னபிறகும் கூட, அவனை குருவாக மனம் ஏற்க மாட்டேன் என்கிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)