-அவன்
காமனைப் போன்ற வடிவமும் – இளம்
காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட
பூமியைக் காக்-கும் தொழிலிலே – எந்தப்
போதும் செலுத்திடும் சிந்தையும்
ஆடலும் பாடலும் கண்டு நான் – முன்னர்
ஆற்றங்கரைதனில் கண்டதோர் – முனி
வேடம் தரித்த கிழவரைக் – கொல்ல
வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன்!”
ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டால், தன்னோடு தானே மனம் எப்படியெல்லாம் முரண்படும் என்பதை மகாகவி பாரதி இந்தப்பாடலில் வெகு அழகாகச் சித்தரிக்கிறான். ஓர் அரசனால் ஞானம் சொல்ல முடியுமா என்ன? மனம் கேட்கிறது.
“ -சிறு
நாடு புரக்கிற மன்னவன் – கண்ணன்
நாளும் கவலையில் மூழ்குவோன் – தவப்
பாடு பட்டோர்க்கும் விளங்கிடா – உண்மை
பார்த்து இவன் எங்ஙனம் கூறுவான்”
என்கிற கேள்வி மனதுக்குள் எழுகிறது.
முந்தைய வரியில்தான், “ஆடலும் பாடலும் கண்டு” கோபம் கொண்ட மனம், இவன் கவலையில் மூழ்கியிருக்கிற அரசன் என்றும் கற்பிதம் செய்து கொள்கிறது.
குருவென்று கருதிக்காண வந்தால் அவர் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டிருப்பது முதல் அதிர்ச்சி. நாடு காக்கும் தொழிலையே ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் செய்வது அடுத்த அதிர்ச்சி. போதாக்குறைக்குக் காமனைப் போன்ற அழகு. காளையர் நட்பு.
இந்த மனிதனிடம் ஞானம் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்து குழப்புகிறது.
ஞானம் என்றாலே அது கல் போல் இறுகிக் கிடக்கும் மனிதர்களிடம்தான் கிடைக்கும் என்பதான கற்பிதத்தைத்தான் பாரதி கிண்டல் செய்கிறான்.
தன்னையுணர்ந்த ஞானி எங்கும், எப்படியும், எந்த செயலிலும் ஈடுபட்டிருக்க முடியும்.
ஆடலும் பாடலுமாய் கண்ணன் வாழ்க்கையைக் கொண்டாடுவது குறித்து ஓஷோ தரும் விளக்கங்களை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
“கண்ணன், வாழ்க்கையையே ஒருவிளையாட்டாக, கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்கிறான். அப்படித்தான் பறவைகளும், பூக்களும், நட்சத்திரங்களும், வாழ்க்கையை வாழ்கின்றன. ஒரு பூ, தான் மலர்வதற்கென்று காரணங்கள் வைத்துக் கொள்வதில்லை. நட்சத்திரங்கள் மினுங்குவதும் அப்படித்தான்.
வாழ்க்கையை இப்படி எடுத்துக் கொள்ளத் தெரியாதவர்கள் கேளிக்கைக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கிறார்கள். எதையாவது பார்த்தும் கேட்டும் நேரத்தை செலவிடுகிறார்கள். இங்கே சந்தோஷத்தின் பார்வையாளர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, சந்தோஷம் அவர்கள் வாழ்வின் நேரடி அனுபவமாய் மலர்வதில்லை” என்கிறார் ஓஷோ.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)