கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன்.
சந்திரன் சோதி உடையதாம் – அது
சத்திய நித்திய வஸ்துவாம் – அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நின்னைச்
சேர்ந்து தழுவி அருள் செய்யும் – அதன்
மந்திரத்தால் இவ்வுலகெல்லாம் – வந்த
மாயக் களிப்பெரும் கூத்துதான் – இதைச்
சந்ததம் பொய் என்று உரைத்திடும் – மடச்
சாத்திரம் பொய் என்று தள்ளடா.
இதில், ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், ஓஷோ ஓரிடத்தில் ‘கண்ணன் என்கிற வார்த்தையே முக்கியமானது. அது எதிர்காலத்தின் நிலவைச் சுட்டிக்காட்டுகிற விரல்’ என்கிறார்.
For me, the very word “KRISHNA” is significant. It is a finger pointing to the moon of the future. பாரதியின் நிலாவும், ஓஷோவின் நிலாவும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவைதானே!
“ஞானியர் தம்மியல் கூறினேன் – அந்த
ஞானம் விரைவினால் எய்துவாய்” என்று தேனினும்
இனியகுரலினில் கண்ணன் சொல்கிறபோது, தன் பண்டைய ஈனக் கனவுகள் மறைகின்றன, ஆடல்தான் உலகம் என்கிற ஞானமும் சித்திக்கிறது என்கிறான் பாரதி.
ஒரு குருவின் முன்னிலையில் ஞானம் மலர்கிற அற்புதம் இது.
குருஷேத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் வழங்கிய கண்ணன், அந்த தரிசனத்தைக் காண்பதற்கு ஞானக்கண்ணும் தந்ததாக ஒரு செய்தி உண்டு.
இது குறித்து, மிகவும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் விளக்குகிறார் ஓஷோ. யசோதை கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்ததையும் அர்ச்சுனன் கண்ணனுக்குள் உலகத்தையே பார்த்தையும் ஒப்பிடுகிறார்.
“அன்பின் உச்சத்தில் இருப்பவர்கள்” ஒருவர்தான் தங்கள் உலகமே” என்று கருதுவதுபோல்தான் இது. ஆனால் அந்த எல்லையோடு நின்று விடுவதில்லை. சரியான வழிகாட்டுதல் இருக்குமேயானால், எந்த ஒன்றிலும் நம்மால் இந்தப் பிரபஞ்சத்தையே பார்க்க முடியும். அப்படியரு பிரபஞ்சத்தையே பார்க்க முடியும். அப்படியரு பிரபஞ்ச தரிசனத்தை யசோதையும் அர்ச்சுனனும் பெற, கண்ணனின் இருப்பு துணை செய்திருக்கிறது.
முழுமையான அன்போடு பார்க்கும் போது, எதிலும் இந்த இறை தரிசனம் சித்திக்கும். விசுவரூபதரிசனம் கிடைக்கும்” என்கிறார் ஓஷோ (276).
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)