அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு?
கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில் விரிவான விளக்கமளிக்கிறார்.
முதலாவது, எல்லையின்மையின் தெய்வீகக் காட்சிக்குத் தயாராக இல்லாதபோது திடீரென்று எதிர்கொள்ள நேர்கையில் அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை என்பது அவர் கருத்து. ஒரு பெரிய ஆனந்தம், எதிர்பாராமல் ஏற்படும்போது, தயார் நிலையில் இல்லாதவர்கள் அதைத் தாங்க-முடியாது. இது முதல் கோணம்.
இரண்டாவதாக, மனிதனின் இயல்பே எதிர்கொள்ள ஆனந்தம் ஏற்படும்போது தடுமாறுவதுதான். வருத்தங்களையும தோல்விகளையும் வாங்கிப் பழகிய மனம், எதிர்பாராத ஆனந்தத்தை ஏற்க முடியாமல் தள்ளாடுகிறது. அர்ச்சுனன் அனுபவித்ததோ பேரானந்தம். தன்னால் தாங்கவியலாத சக்தியுடன் பிரவாகமெடுத்த அந்த அனுபவத்தின் பிரமாண்டத்தில் அர்ச்சுனன் அச்சமடைந்தது இயல்புதான் என்கிறார் ஓஷோ.
அவருடைய இந்தப் பார்வையை அடித்தளமாகக் கொண்டு இன்னும் விரிவாக சிந்திக்கலாம். பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை கவனித்துப் பாருங்கள். பகை வரும்போது சிலிர்த்து நிமிர்ந்து நிற்கும். எஜமானர் வருடிக் கொடுத்தால் கூனிக் குறுகி ஒண்டிக் கொள்ளும்.
இந்த இயல்பு மனிதர்களுக்கும் உண்டு. பாதுகாப்பான நிலையில் இருப்பதன் குறியீடே அணைப்புக்குள் சுருண்டு கொள்வதுதான். பாதுகாப்பான சூழல் ஏற்படும் போதெல்லாம் மனம் செயற்கையாகவே ஓர் அச்சத்தையோ ஆபத்தையோ கற்பனை செய்து கொள்கிறது.
அதிலிருந்து விடுதலையும் ஆதரவும் அரவணைப்பும் கிட்டிவிட்டதாக எண்ணும்போது, நிம்மதி இன்னும் ஆழமாகிறது. இது மனதின் இயல்பு. அர்ச்சுனனுடைய அச்சம், தன்னினும் பிரம்மாண்டமான ஒன்றை தரிசனம் செய்ததன் விளைவுதான். எனினும், அச்சம் தரும் மிகப் பெரிய சக்திக்கு அருகே நிற்பதுதான் பாதுகாப்பும்கூட அப்போது மனதில் ஏற்படுகிற அச்சம் தான் அந்தப் பாதுகாப்பை இன்னும் சரியாக அனுபவிப்பதற்கு உதவுகிறது.
மனிதன் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவதிலும் இந்த உளவியல் செயல்படுகிறது. போர்வையின் கதகதப்பில் ஒருவிதமான பாதுகாப்பை உணர்கிறான் மனிதன். குழந்தைகள், அச்சம் தரும் கதைகளைக் கேட்டுவிட்டு இழுத்துப் போர்த்தி உறங்கும் போது அச்சம் கலந்த சந்தோஷத்திலேயே தூங்கிவிடுகின்றன.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)