சந்தோஷத்தில் இருக்கும் போது அந்த சந்தோஷத்தை ஆழமாக உணர வேண்டி மனம், இனந்தெரியாத அச்சமொன்றை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த மனநிலையை, கண்ணன் பாட்டு வரிசையில் ஒரு பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. காட்டுக்குள் பெண்ணொருத்தி கண்ணனுக்காகக் காத்திருக்கிறாள்.
“திக்குத் தெரியாத காட்டில் – உன்னைத்
தேடித்தேடி இளைத்தேனே” என்று சொல்கிறாளே தவிர, அந்தப் பாடல் முழுவதும் காடு சார்ந்த அவளின் பிரியங்களே வெளிப்படுகின்றன. உண்மையில் கானகத்தை ரசிக்கிறாள். தன்னுடன் கண்ணன் இல்லையே என்கிற கவலைதான் அவளுக்கு. மக்கள், மலைகள், நதிகள் கனிகள் என்று ஒவ்வொன்றாய் அனுபவிக்கிறாள்.
“மிக்க நலமுடைய மரங்கள் – பல
விந்தைச் சுவையுடைய கனிகள் – எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் – அங்கு
பாடி நகர்ந்துவரும் நதிகள்”
இந்த வரிகளில் பயத்தின் சுவடுகள் ஏதும் தெரிகின்றனவா என்ன-? இந்தப் பெண் அந்த வனத்தோடு நன்கு பழகியவளாகவே தெரிகிறாள்.
பூக்களைப் பார்க்கிறாள். உதிர்ந்து கிடக்கிற இலைகளே ஒரு கடல் போலத் தோற்றமளிக்கின்றன. விலங்குகளின் இயல்புகளும் அவளுக்கு நன்றாகத் தெரிகிறது.
“நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள் – எங்கும்
நீளக் கிடக்கும் இலைக் கடல்கள் – மதி
வஞ்சித்திடும் அகழிச் சுனைகள் – முட்கள்
மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்
ஆசை பெற விழிக்கும் மான்கள் – உள்ளம்
அஞ்சக் குரல் பழகும் புலிகள் – நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை – அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் – அதன்
சத்தத்தினால் கலங்கும் யானை – அதன்
முன் நின்றோடும் இள மான்கள் – இவை
முட்டாது அயல் பதுங்கும் தவளை”
இந்த வனமெங்கும் சுற்றித் திரிந்து, சோர்ந்து படுத்து இத்தனை ஓசைகளுக்கும் நடுவில் தூங்கவும் தொடங்குகிறாள். இந்த வனச்சூழலின் பிரம்மாண்டமே பெரியதொரு பாதுகாப்பாகத் திகழ்கிறது அவளுக்கு. கண்ணனின் அரவணைப்பு என்கிற மிகப் பெரிய பாதுகாப்பும் கொஞ்ச நேரத்தில் கிடைக்கப் போகிறது.
இத்தனை பாதுகாப்பின் ஆழமும் புரிய வேண்டுமென்றால் அதற்கென்றோர் அச்சம் வேண்டுமல்லவா! மனம் செயற்கை அச்சத்தை ஒரு கனவின் வழியே சிருஷ்டித்துக் கொள்கிறது.
வேல் கைக் கொண்ட கொடிய வேடன் தோன்றி, தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். “திருமணமான பெண்ணை நீ விரும்பலாமா அண்ணா” என்று அலறுகிறாள்.
தொடர்ந்து மிரட்டுகிறான் வேடன். “கண்ணா” என்றலறி விழுகிறாள். மயக்கத் தெளிந்து எழுந்தால் வேடனைக் காணவில்லை. கண்ணன்தான் நிற்கிறான்.
காதால் இந்தஉரை கேட்டேன் – அட
கண்ணா என்றலறி வீழ்ந்தேன் – மிக
போதாகவில்லை இதற்குள்ளே – என்றன்
போதம் தெளிய நினைக் கண்டேன்.”
மயக்கம் தெளிந்து எழுந்தவள், “கண்ணா வேடனெங்கு போனான்” என்று கேட்கிறாள். வந்திருந்தால்தானே போவதற்கு!
கண்ணனின் அண்மையினை அவன் அரவணைப்பின் பாதுகாப்பை உணர்வதற்கு அச்சம், அவசியப் பொருளாகிவிடுகிறது. அச்சத்தின் இருளுக்கு நடுவே கண்ணனின் ஜோதி வெளிச்சம் இன்னும் பிரகாசமாக மின்னுகிறது. அடிபட்டு விழுந்து கிடக்கிறதொரு பறவை. அதனை நெருங்குகிறோம். தீமை செய்வோமா என்று அஞ்சித் தவித்த பறவையை அள்ளியெடுத்து வருடிக் கொடுக்கும்போது அதன் சிறகுகள் சிலிர்க்கின்றன. கண்கள் கிறங்குகின்றன. அந்தப் பறவையின் அச்சம்தான் அர்ச்சுனனின் அச்சம் என்பதை, பாரதியும் ஓஷோவும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)