மகாவீரரோடும் புத்தரோடும் ஓஷோ கண்ணனை ஒப்பிடுகிறார். மகாவீரரின் மார்க்கத்தில் முப்பதாயிரம் பெண் துறவிகள் இருந்தனர். இருந்தும் பிரம்மச்சர்யத்தை போதித்தார் மகாவீரர்.
புத்தர் ஒரு காலகட்டம் வரையில் பெண்களைத் தன் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. “புத்த தன்மையை ஏன் பெண்கள் பெறக்கூடாது? பெண்ணாய்ப் பிறப்பதே பாவமா?” என்றெல்லாம் கிருஷ்ண கௌதமி போராடிய பிறகு தன் முதல் பெண் சீடராக கிருஷ்ண கௌதமிக்கு தீட்சை கொடுத்தார் புத்தர்.
ஆனால் கண்ணன், பெண்களை எந்த மனத் தடையுமில்லாமல் தனக்கு அணுக்கமாக ஏற்றுக்கொண்டான்.
கண்ணனின் இருப்பே பெண்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக அமைகிறது. இதை, மகாகவி பாரதி,
“பெண்டிர் தமக்கெல்லாம் – கண்ணன்
பேசரும் தெய்வமடி” என்று பாடுகிறான்.
கண்ணனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவே பெரிய வரம், அவனுடன் காதல் உறவென்று தனியாகத் தேவையில்லை என்கிற குரல், பாரதியின் கண்ணன் பாட்டிலும் ஒலிக்கிறது.
“பங்கம் ஒன்றில்லாமல் – முகம்
பார்த்திருந்தால் போதும்;
மங்களம் ஆகுமடி – பின்னோர்
வருத்தம் இல்லையடி” என்கிறது வரிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
கண்ணன்-ராதை உறவு பற்றிய அடிப்படை சந்தேகம் ஒன்றை ஓஷோவிடம் சீடரொருவர் கேட்கிறார். புல்லாங்குழல் தான் கண்ணனுக்குச் சொந்தமென்று, அதன் இசை ராதைக்குத்தான் சொந்தமென்று சொல்கிற அளவு கண்ணன்-ராதை காதல் கொண்டாடப்படுகிறது. “ராதாகிருஷ்ணன்” என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் பாகவதத்தில் ராதை பற்றிய எந்தக் குறிப்புமே இல்லை. அப்படியானால் “ராதை” என்பதே கற்பனைப் பாத்திரமா என்று கேள்வி கேட்கப்படுகிறது.
கவித்துவம் கமழும் பதிலொன்றைத் தனக்கேயுரிய பாணியில் தருகிறார் ஓஷோ.
“தொடக்க கால நூல்களில் ராதை பற்றிய குறிப்பே இல்லை என்பது உண்மைதான். பிற்கால ஏடுகள்தான் ராதை பற்றிச் சொல்கின்றன. எனவே ராதையே ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பலர் கருதுகிறார்கள். நான் அவ்வாறு கருதவில்லை. ராதை, கண்ணனுடன் இரண்டறக் கலந்திருந்தாள். அவர்கள் உறவின் நெருக்கத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றியிருந்தாலேயே ராதையைத் தனியாகப் பிரித்தறியக் கூடவில்லை. ராதை, கண்ணனுடன் உறவு கொண்டிருக்கவில்லை. ராதை கண்ணனாகவே இருந்தாள்” என்கிறார் ஓஷோ.
“Radha is not in a kind of relationship with krishna; She is krishna himself.”
‘கண்ணம்மா என் காதலி’ என்று பாடிக்கொண்டே வருகிற பாரதியிடமிருந்தும் இப்படியரு மின்னல் தெறித்து விழுகிறது.
“அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை – இரண்டு
ஆவியும் ஒன்றாகும் எனக் கொண்டதில்லையோ”
என்கிற வரி ராதை&கண்ணன் உறவை சொல்லாமல் சொல்கிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)