பொதுவாக காதலன் காதலியரிடை சம்பிரதாயமாக சொல்லப்படும் காதல் மொழிகள் இந்த இருவருக்கும் தேவையில்லை என்பதையும் பாரதி தெளிவுபடுத்துகிறான். பாட்டும் சுதியும் ஒன்றாய்க் கலந்தால் ஒன்றையன்று பாராட்டுமா! நிலவு, விண்ணை தனியாகப் பார்த்துப் புகழ் மொழி சொல்லுமா? விறகில் நெருப்பு பற்றும் போது உபசார வார்த்தைகளை உச்சரிக்குமா? என்று கேள்விகளை அடுக்குகிறான் பாரதி.
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் – தம்முள்
பன்னி உபசரணை பேசுவதுண்டோ?
நீட்டும் கதிர்களடு நிலவி வந்தே – விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின் மருவுமோ?
மூட்டும் விற்கினை அச் சோதி கவ்வுங்கால் – அவை
முன் உபசார வகை மொழிந்திடுமோ!
ஒன்றுடன் ஒன்றாகக் கலந்து நிற்கும் உன்னதக் காதல் உறவு பற்றி பாரதியும் ஓஷோவும் நமக்கு உணர்த்துகிற போதே, மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு பற்றிய தேவாரப்பாடல் ஒன்றும் நம் நினைவுக்கு வருகிறது.
விறகில் தீயினன்; பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வுகோல் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே!
கண்ணனுக்குள் மறைந்திருக்கிறாள் ராதை, ஓஷோவின் விளக்கமென்னும் உறவுகோல் நடுகிறோம். பாரதியின் பாடலென்னும் உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைகிறோம். முறுவலோடு வெளிப்படுகிறாள் ராதை.
இந்த இடத்தில் ஓஷோ இன்னொன்றையும் தெளிவுபடுத்துகிறார். உளவியல் அடிப்படையில் ஓர் ஆணுக்குள் சில சதவிகிதங்களுக்குப் பெண்மை இருக்கிறது. அதே போல ஒரு பெண்ணுக்குள் சில சதவிகிதங்களுக்கு ஆண்மை இருக்கிறது.
அந்த அளவில் முழுமையான ஆண் என்று கண்ணன் பேசப்படுகிறான். அவனைப் புருஷோத்தமன் என்று சொல்வதும் இதனால்தான்.
“தன்னளவில் முழுமையான ஆண் முழுமை பெற வேண்டுமென்றால் தனக்குள் ஆண் தன்மை அறவே இல்லாத முழுமையான பெண்மையின் துணையோடுதான் அது சாத்தியமாகும்” என்கிறார் ஓஷோ.
“For a whole man like krishna, a whole woman like Radha is a must” என்கிறார் ஓஷோ. அவர் இன்னொன்றையும் சுட்டிக் காட்டுகிறார். தன்னையே முழுவதுமாகக் கண்ணனில் கரைத்துக் கொண்ட ராதா, கண்ணனுடைய பெயரின் முன்பாதியாகத் திகழ்கிறாள். தங்களை முழுவதுமாக ஒப்புக் கொடுத்தவர்கள், இறைவனை முழுமையாகப் பெறுகிறார்கள் என்கிறார் ஓஷோ.
மாணிக்கவாசகர் நம் நினைவுக்கு வருகிறார்.
“தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ! சதுரர்! என்ற வரியின் இன்னொரு பரிமாணத்தை இங்கே பார்க்கிறோம்.
இந்தக் கோணத்தில் பாரதியும் சிந்தித்திருப்பான் அல்லவா? ‘ராதா கிருஷ்ணன்’ என்ற பெயரில் முதல் இடம் ராதைக்கும் அடுத்த இடம் கண்ணனுக்கும் தரப்படுகிறது என்கிற சிந்தனையோடு, பாரதியின் கண்ணன் பாட்டைக் காணும் போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.
“பாயமொளி நீயெனக்கு – பார்க்கும்விழி நானுனக்கு
தோயும்மது நீயெனக்கு – தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருவதில்லை – வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே – குறையமுதே கண்ணம்மா!”
இந்தப் பாடலின் நாயகி, பாரதியின் கண்ணம்மாவாகிய கண்ணன் அல்ல. கண்ணனின் கண்ணம்மாவாகிய ராதைதான்.
தனக்கென்றோர் உருவமில்லாமல் ராதை கண்ணனில் கலந்துவிட்டதாலேயே அவளைத் தனித்துக் காணமுடியவில்லை என்பதை ஓஷோவின் பார்வையில் உணர்ந்தோம். மலரின் மணத்திற்குத் தனி உருவம் கிடையாது. அது மலரோடு கலந்திருக்கிறது. பேசுகிற சொல்லின் அர்த்தத்திற்கு உருவம் கிடையாது. அது மொழியோடு கலந்திருக்கிறது.
“வீசுகமழ் நீயெனக்கு – விரியும் மலர் நானுனக்கு
பேசுபொருள் நீயெனக்கு – பேணும்மொழி நானுனக்கு
உயிருக்கு உருவமில்லை – அது நாடித்துடிப்பில் கலந்திருக்கிறது. “செல்வம்” என்பதற்குத் தனியாக உருவமில்லை. அது நிதியின் வடிவில் கலந்திருக்கிறது. இதை அப்படியே ராதைக்கும் கண்ணனுக்கும் பொருத்திப் பார்க்க வைக்கிறது பாரதியின் பாட்டு.
நல்லவுயிர் நீயெனக்கு – நாடியடி நான்உனக்கு
செல்வமடி நீயெனக்கு – சேமநிதி நான்உனக்கு
எல்லையற்ற பேரழகே – எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய் – மோதும் இன்பமே கண்ணம்மா!
கண்ணனின் காதல் உலகத்தில் மறைந்து கிடக்கும் மகத்தான ரகசியங்களை ஓஷோவும் பாரதியும் உணர்த்துகிறார்கள்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)