கண்ணன் பாட்டு இன்னும் சில குறிப்புகள்

பாரதியின் கண்ணன் பாட்டு, அர்ச்சுனனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது. முதல் பாட்டின் போது மட்டும் இந்த அணுகுமுறையை பாரதி கைக்கொள்ளவில்லை. கண்ணன் மேல் அர்ச்சுனனுக்கு நட்பு நிலையில் அரும்பியிருந்த அன்பு, காதலாய், பக்தியாய், பரிவாய், உறவு கொண்டாடும் நேசமாய் முற்றி முதிர்ந்த பல்வேறு நிலைகளின் பதிவுகளே கண்ணன் பாட்டு என்பதை காண முடிகிறது.

‘கண்ணம்மா என் காதலி’ என்று பாரதி பாடுகிற இடமொன்றிலும் இந்தச் சிந்தனை உறுதி பெறுகிறது. ‘இந்த உறவு நெடுநாளாக நிலைக்கிற உறவு’ என்று சோதிடன் சொன்னதாகக் கண்ணம்மாவிடம் சொல்கிற காதலன், புத்தனான போது நீ யசோதரை ஆனாய் என்று சொல்கிறபோது, “நீ கண்ணனாகப் பிறந்த போது நான் அர்ச்சுனனாக வந்தேன்” என்பதாக பாரதி பாடுகிறான்.

காதலி என்ற உறவமைத்துப் பாடும்போது காதல் உறவொன்றை சொல்லிச் சித்தரித்துப் பாடியிருக்கலாம். ஆனால், நீ கண்ணன் என்றால் நான் அர்ச்சுனன் என்றுதான் பாரதி பாடுகிறான்.

“நேற்று முன்னாளில் வந்த உறவன்றடி – மிக
நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்.
போற்றும் இராமனென முன்புதித்தனை – அங்கு
பொன் மிதலைக்கரசன் பூ மடந்தை நான்;
ஊற்றமுது என்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் – கண்ணன்
உருவம் நினக்கு அமையப் பார்த்தன் அங்கு நான்”
என்பது அந்தப் பாடல்.

தன்னுடைய தனிப்பாடல்கள் சிலவற்றில் கண்ணனை பாரதி பார்த்த பார்வைக்கும், கண்ணன் பாட்டில் பாரதி பார்த்திருக்கும் பார்வைக்குமே கூட மகத்தான வித்தியாசம் உண்டு.

கண்ணன் என்னும் பேருண்மையைக் கண்டு கனிந்த மனநிலையில் எழுதப்பட்டது கண்ணன் பாட்டு என்பதை இதன் பாடல்கள் ஒவ்வொன்றும் பறை சாற்றுகின்றன. வாழ்க்கையை மிகப் பெரிய விளையாட்டாகக் கண்ணன் காண்பதைப் பாடுகிற பாரதிக்கு, கண்ணனைத் தன் தாய் எனறு பாடத் தோன்றுகிறது. அந்த நிலையில் இந்த உலகம், மலைகள், நதிகள், நதிகள் சென்று கலக்கும் கடல், எல்லாமே தனக்கென்று கண்ணனாகிய தாய் தந்திருக்கும் பொம்மைகள் என்கிறான் பாரதி. இன்பம்&துன்பம்&தோல்வி&வெற்றி எல்லாம் அந்த அன்னை சொல்கிற கதைகள்.

“மந்தை மந்தையாய் மேகம்-பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்
முந்த ஒரு சூரியனுண்டு – அதன்
முகத்தொளி கூறுதற்கோர் மொழியிலையே”

“நல்ல நல்ல நதிகளுண்டு – அவை
நாடெங்கும் ஓடி விளையாடி வருங்காண்’
மெல்ல மெல்லப் போய் அவைதாம் – விழும்
விரிகடல் பொம்மையது மிகப் பெரிதாம்”

இந்த அனுபவத்தைப் பெறுவது மிக அரிது. வெறும் கற்பனையில் பிறந்துவிடக் கூடியதல்ல இந்தக் கவிதை. எல்லையின்மையின் அரிதான அனுபவம் நிகழ்ந்திருந்தாலொழிய இவ்வளவு வலிமையாய் எழுதவியலாது.

அதனால்தான், கண்ணன் பாட்டில் பாரதி பொதுப்படையாக எழுதுகிற பாடல்களிலும் கூட அரிய தத்துவங்கள் மறைபொருளாகப் பொதிந்து நிற்கின்றன.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Comments

  1. Hi Sir, I want to gift this book to a friend. Can i get a link where it can be ordered ? It will be really helpful because this friend is an avid reader, Bharathiar’s devoted fan and feels Osho as one of his Gurus. I love this friend a lot and it will be a great gift for him. Please help !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *