“தீராத விளையாட்டுப்பிள்ளை” என்கிற பாடலும் அப்படித்தான். உலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது போன்றவை இறைவனின் அலகிலா விளையாட்டு என்கிறார் கம்பர்.
“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார், அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
என்பது கம்பராமாயணப் பாடல்.
இந்தச் சிந்தனை பாரதியிடம் வரும் போது,
“தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை”
என்று வடிவம் கொள்கிறது.
படைத்தல்-காத்தல்-அழித்தல் போன்ற பணிகளை இடையறாமல் செய்யும் போது ஜீவான்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து தொல்லைக்கு ஆளாக நேர்கிறது. இதுதான் “தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை”. இந்தப் பாடல், கண்ணனின் கோகுல லீலைகளைச் சொல்வது போலப் போய் பென்னம் பெரிய செய்திகளைச் சொல்லிவிடுகிறது.
“தின்னப் பழம் கொண்டு தருவான்”. இது, உலக வாழ்க்கையில் நாம் தேடிப் பெறுகிற விஷயங்கள், ஆதரம் கடித்த ஆப்பிள் போல! கல்வி – செல்வம் – மரியாதை – வெற்றி போன்றவை, கடவுளால் வந்தவை என்பதை மறந்து மனிதன் எல்லாம் தான் செய்தது என்று தருக்கடைகிற தருணங்கள் உண்டு. உடனே கண்ணன் அவற்றைப் பிடுங்கிக் கொள்கிறான்,
“தின்னப் பழம் கொண்டு தருவான் -பாதி
தின்கின்ற போதினில் தட்டிப் பறிப்பான்!”
உடனே சுதாரித்துக் கொள்கிற மனிதன், கெஞ்சிக் கூத்தாடி, கோயில் கோயிலாய் ஏறி இறங்கி, திரும்பக் கொடுக்குமாறு கேட்கிறான். இப்போது, அதனைத் தன்னுடைய பிரசாதம் என்கிற உணர்வோடு பயன்படுத்தும் அறிவையும் தந்து திரும்பத் தருகிறான் கண்ணன்.
“என்னப்பன் என் ஐயன் என்றால் – அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்”
இழந்த ஒன்று, ஈசுவரப் பிரசாதமாகத் திரும்பி வருகிறது.
ஒரு மனிதனுக்கு வருகிற குழப்பமே கடவுள் எப்போது தன்னை ஆதரிக்கிறான், எப்போது சோதிக்கிறான் என்று தெரியாததுதான். என்ன சோதிக்கிறான் என்று தெரியாததுதான். எதையும் அடையவே முடியாத நிலை ஏற்படும். இது ஒன்று. திடீரென்று பாராட்டு வருகிறது. திடீரென்று எதிர்பாராத வலி வருகிறது. இதுவும் வாழ்வில் அடிக்கடி நிகழ்வதுதான். இவை கண்ணனின் விளையாட்டு என்கிறான் பாரதி.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)