“தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்!”
ஒன்று வேண்டும் வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. ஆனால் அது வேறொருவருக்கும் கிடைக்கிறது. இதை கண்ணனில் லீலையென்று பாரதி பாடுகிறான்.
அழகுள்ள மலர் கொண்டு வந்தே – என்னை
அழ அழச் செய்துபின் “கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன்” என்பாள் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்”
இப்படி நீண்டு கொண்டே போகிறது. பாடல் அதில் மிக நுட்பமான ஆன்மீகச் செய்தியன்றை பாரதி அனாயசமாகப் பாடிவிடுகிறான்.
இந்த ஆன்மா, இறைவனின் சந்நிதியில் இருந்து உலகில் பிறக்கும்படி இறைவன் கட்டளையிடுகிறான். ஆன்மா மறுக்கிறது. ஆண்டவன் இழுக்கிறான். பூமிக்கு வந்த உலக விளையாட்டில் ஆன்மா மூழ்கிவிடுகிறது. ஆட்டத்திலிருந்து இறைவன் இடையிலேயே விலகிக் கொள்கிறான். இந்த ஆன்மா உலக இன்பங்களில் மூழ்கி விட்டது. மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியதுதான் என்று தீர்ப்பெழுதுகிறான்.
ஒரு வீதியிலிருக்கும் வீட்டைப் பாடுவது போல மோட்சமாகிய “வீட்டை”ப் பாடுகிறான் பாரதி.
விளையாட “வா” என்றழைப்பான் – வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளாது இழுப்பான்
இளையாரோடு ஆடிக் குதிப்பான் – எம்மை
இடையிற் பிரிந்து போய் வீட்டிலே சொல்வான்.
இந்தக் கண்ணனை எப்படி இருக்கிறான்?
“கோளுக்கு மிகவும் சமர்த்தன்” அதாவது கோள் சொல்வதில் சமர்த்தன் என்பது வெளிப்படையான பொருள். கோள்களை நகர்த்துவதில் சமர்த்தன் என்பது மறைமுகப் பொருள்.
“கோளுக்கு மிகவும் சமர்த்தன் – பொய்மை
குத்திரம் பழி சொல்லக் கூசாச் சழக்கன்!”
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)