பொய்மை-பழி-போன்றவற்றினைச் சொல்வதால் ஏற்படும் குற்ற உணர்வோ கூச்சமோ கண்ணனுக்குக் கிடையாது. அது மட்டுமா?
“ஆளுக்கு இசைந்தபடி பேசி – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்”
அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வலியுறுத்துவார்கள். அந்த அளவுகோல்களுக்குக் கண்ணன் அகப்படத்தான் செய்கிறான். உடனே “என் கடவுளே கடவுள்” என்று ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆகாமல் போய்விடுகிறது.
முற்றிலும் வேறொரு மனோநிலையிலிருந்து கண்ணனை பாரதி பார்த்திருப்பதைக் கண்ணன் பாட்டு நமக்குச் சொல்கிறது. ஆகவேதான் கண்ணன் பாட்டு முழுக்க “அர்ச்சுன மனோபவம்” என்று நம்மால் வகைப்படுத்த முடிகிறது.
ஒரு குருவின் பன்முகப் பேராற்றலை அணுக்கச் சீடர்தான் அறிந்து கொள்ளமுடியும். அப்படியரு சீடன் அர்ச்சுனன். கண்ணனின் கடவுட் தன்மையை நீண்ட காலம் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டோம் என்கிற ஆதங்கம், அர்ச்சுனனின் பக்தியை வலுப்படுத்துகிறது.
கண்ணனை எல்லையில்லாதவோர் அனுபவமாக பாரதி கண்டுணர்ந்த காரணத்தால் தான் கண்ணன் பாட்டு இத்தனை அவதாரங்களைக் கொண்டு நிற்கிறது. பல அற்புதங்களை உள்ளடக்கிய புதையலாய்த் திகழ்கிறது.
“வெள்ளைப்பாட்டு” என்று பாரதி பாடல்களை அந்தக் காலத்தில் சிலர் சொன்னதுண்டு. ஆனால், குயில் பாட்டு&கண்ணன்பாட்டு போன்றவை பாரதியின் தத்துவக் களஞ்சியங்கள்.
வேதங்களை ‘மறைபொருள்’ என்று சொன்னதன் காரணம், அதற்குள் மறைந்திருந்த மகத்தான செய்திகள். இலக்கியப்புலமை-பக்தி-மொழி ஆளுமை போன்ற அம்சங்களைத் துணைப் பொருளாக மட்டுமே கொண்டு ஒரு பிரம்மாண்டத்தைத் தரிசித்த சிலிர்ப்போடும் தெளிவோடும் பாரதியின் கண்ணன் பாட்டு உருவெடுத்திருக்கிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)