டார்வினின் பரிணாமக் கொள்கையின்படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால் அது உடலளவிலான பரிணாமத்தை மட்டுமே குறிக்குமென்றும், ஆன்மா என்று பார்க்கிற போது பசுவின் ஆன்மாவே அடுத்த பரிணாமத்தில் மனித ஆன்மாவாக மலர்கிறது என்றும், காரண காரியங்களோடு ஓஷோ இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.
இராமன் அவதாரம் நிகழும் முன்பே வான்மீகி இராமாயணத்தை எழுதி விட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. இது குறித்தும் மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் ஓஷோ விளக்கம் சொல்கிறார்.
இராமன், மரபார்ந்த நெறிகளுக்குள் உட்பட்டு வாழ்ந்தவன். இந்த இந்தச் சூழலில் இப்படி இப்படித்தான் நடந்து கொள்வான் என்று எளிதாக அனுமானிக்க முடியும்.
ஆனால் கண்ணன் எந்த விநாடியில் எதைச் செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாது.
நெறிகளுக்கு உட்பட்டு கணித்துவிடக் கூடிய வாழ்க்கை இராமனுடைய வாழ்க்கை என்பதைத்தான் இராமவதாரம் நிகழும் முன்பே வான்மீகி இராமாயணம் எழுதினார் என்கிற கதை நமக்குச் சொல்கிறது என்கிறார் ஓஷோ.
எல்லா வகைகளிலும் வித்தியாசமாக விளங்கும் கருத்துகள் கொண்ட புத்தகம் இது. அர்ச்சுனனின் மனநிலையில் இருந்து பாரதி கண்ணன் பாட்டு எழுதினான் என்று சொல்வதைப் போலவே கண்ணனைக் கண்ணனின் நிலையிலிருந்து ஓஷோ உணர்ந்தார், உணர்த்தினார் என்று கருத இடமிருக்கிறது.
இதை ஓஷோவே ஓரிடத்தில் சொல்கிறார். ‘கண்ணனைப் பேசும் போது நீங்கள் கண்ணனாகவே மாறி விடுகிறீர்களா-?” என்கிற கேள்வி கேட்கப்படும் போது “நாம் ஒன்றாக இல்லையென்றால்தானே அதுவாக மாற வேண்டும்” என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.
தான் எல்லையின்மையை உணர்ந்திருப்பதற்கான பிரகடனமே இது.
இதைக் கடந்து, இன்னும் பல தளங்களில் பாரதியும் ஓஷோவும் ஒன்றுபட்டிருக்கக் கூடும். அவற்றைக் கண்டறியவும் காலம் நமக்குத் துணை செய்யும்.
“காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே!
காண்பார்யார் கண்ணுதலாய் காட்டாக்காலே”
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)