கண்ணனையே நினைத்து, கண்ணனில் கலந்த ஆண்டாள் இந்த உணர்வின் உச்சம் தொட்டவர்.
“உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனைக் கண்டக் கால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே”
என்கிறார் ஆண்டாள்.
ஆழ்வார்கள் கண்ணனை இப்படி வெவ்வேறு பாவங்களில் அனுபவித்தனர். அந்த அனுபவங்கள், கண்ணனுக்கும் அவர்களுக்குமான ஏகாந்த உறவை உணர்த்தின. இவர்களுடைய பார்வைக்கும் ஓஷோவின் பார்வைக்கும் என்ன வேறுபாடு?
கண்ணன் மீது விருப்பும் பெருகாமல், மனவிலகலும் இல்லாமல் நடுநிலையில் நின்று பார்த்தவர் ஓஷோ. கண்ணனை முழுமையானதொரு வாழ்க்கைத் தத்துவமான அடையாளம் காட்டுகிறார்.
கண்ணனை எல்லாக் காலங்களுக்கும் பொருந்துகிற ஒரு தத்துவமாகக் காண்பது வெறும் பக்தி அடிப்படையில் மட்டுமல்ல. முற்றிலும் முழுமை பெற்ற வாழ்க்கைத் தத்துவம் கண்ணன். நியதிகளுக்குள் நின்றுவிடாத, நிபந்தனைகளுக்குள் கட்டுப்படாத, சுயத்தின் சுடர், கண்ணன்.
இருள் – வெளிச்சம், உண்மை – பொய், நட்பு – பகை என்று எல்லாத் துருவங்களையும் வாழ்க்கையின் அம்சங்களாக ஏற்றுக் கொள்ளும் நிபந்தனைகளற்ற வாழ்க்கை கண்ணனுடையது.
கண்ணனை எதிர்காலத்திற்குரிய கடவுள் என்று ஓஷோ பிரகடனம் செய்ததும் இதனால்தான். கண்ணன் எப்படியிருப்பான்? வாழ்க்கையைப் போல் இருப்பான். வாழ்க்கை எப்படி இருக்கும்? கண்ணனைப் போல் இருக்கும். எனவே, எல்லாக் காலங்களுக்கும் நிலையான ஆதர்சமாய் நிற்கிறான் கண்ணன்.
இந்த உண்மையை உணர்வதற்கும், உரக்கச் சொல்வதற்கும், அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பாரதிக்கும், ஓஷோவுக்கும் இருந்தது. அதனாலேயே பாரதியிடம் கண்ணன் பாட்டு பிறந்தது.
எந்தவொரு சமயக்கோட்பாட்டையும் வலியுறுத்தாமல், நிரந்தரமான உண்மையையும், நிரந்தரமான அன்பையுமே உணர்வதற்கு எல்லோருக்கும் துணை புரிந்த ஞானியாகிய ஓஷோ கண்ணனைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அவராற்றிய நீக்கின உலகம் பார்த்திராத கோணத்தில் கண்ணனை உணர்த்தின. அதே பார்வை பாரதிக்கும் இருந்ததை கண்ணன் பாட்டு காட்டுகிறது.
பாரதி ஒரு கவிஞன் ஆகையால், கண்ணனின் சீர்மைகளை விதந்தோதும் நடை கண்ணன் பாட்டில் காணப்படுகிறது. ஆனாலும் கண்ணனை வாழ்க்கைத் தத்துவமாகவே பாரதி பார்த்தான். எல்லோருக்கும் தெரிந்த கண்ணனை மிகப்புதிய கண்ணோட்டத்தில், கண்ணன் பாட்டில் பதிவு செய்தான்.
பாரதியையும் ஓஷோவையும் ஒப்பிடும் போது கண்ணனின் புதிய தரிசனம் துலங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஓஷோவின் KRISHNA THE MAN AND HIS PHILOSOPHY படிக்கிற போதெல்லாம் அதற்குப் பொருத்தமான கண்ணன் பாட்டு வரிகளைக் குறித்து வைக்கும் பழக்கம் வளர்ந்து, இப்படியரு புத்தகம் உருவாக்க கை கொடுத்தது.
நன்கு யோசித்தால், பாரதிக்கும் ஓஷோவுக்கும் இன்னும் பல தளங்களில் ஒற்றுமை இருப்பதைக் கண்டறிய முடியும். அத்தகைய முயற்சிக்கோர் ஆரம்பமே இந்தப் புத்தகம்.
பாரதி அன்பர்களுக்கும் ஓஷோ அன்பர்களுக்கும் இந்த முயற்சி, மகிழ்ச்சி தருமென்று நம்புகிறேன்.
‘கண்ணனை நினைந்துருகும் போது தென்றல்வந்து தீ வீசுவதாய் ஆழ்வார் பாடினார். இந்த முரண்களின் தொகுப்பே வாழ்க்கை. முரண்களின் அழகே கண்ணனின் அழகு. வாழ்க்கையும் கண்ணனும் வேறில்லை.
மரபின் மைந்தன் ம.முத்தையா
(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)