‘உலகெலாம்’ என்று தொடங்குகிறது பெரியபுராணம். தமிழின் பெரும்பாலான பேரிலக்கியங்கள், ‘உலகம்’ என்ற சொல்லிலேயே தொடங்குகின்றன. “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுருகாற்றுப் படை, தமிழர்களின் சிந்தனை உலகளாவியதாகவே இருந்திருக்கிறது என்பதன் அடையாளம். “யாதும் ஊரே” என்பதும், “உலகம் உவப்ப” என்பதும், “உலகம் யாவையும்” என்பதும், “உலகெலாம்” என்பதும் வெறும் சொற்றொடர்களில்லை. விரிந்த சிந்தனையின் செறிந்த அடையாளங்கள்.
உலகம் முழுமைக்குமான சிந்தனைப் பாங்கைப் பொறுத்தவாறு சேக்கிழார் வலியுறுத்தும் சைவம் மேலே ஒரு படி போகிறது. “தென்னாடுடைய சிவனே போற்றி” “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்கிறது சைவம். இன்று, நவீன யுகத்தில் Be Local; Think Global என்கிறார்கள். சில நூறு ஆண்டுகள் முன்பே சைவம் இதனைக் கோட்பாடாக அறிவித்துவிட்டது.
குறிப்பிட்ட சமய சார்புடைய இலக்கியமென்றும், பக்தியின் கருவூலம் என்றும் ஒரு சாரரால் மட்டுமே ஆராதிக்கப்படுகிற நூல் என்றும் பலரும் பெரியபுராணம் குறித்து கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
கால மாற்றங்கள் ஏற்பட ஏற்பட வாழ்க்கைச் சூழலில் தோன்றும் புதிய ஆக்கங்களை அறிந்து கொள்ளாமல் மனிதன் தடுமாறுகிறான். காலத்தை வென்ற இலக்கியங்களில், கண்டும் காணாமல் கடந்து போன பகுதிகள், புதிய வாழ்க்கைச் சூழலில் கை விளக்காய் விளங்குவதைப் பிறகுதான் மனிதன் கண்டு கொள்கிறான்.
பெரிய புராணம், இந்தப் புதிய யுகத்துக்கான கை விளக்குகளைக் கருணையோடு வழங்குகிறது. சமய எல்லை, கால எல்லை ஆகியவற்றைக் கடந்து சமகாலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பொருத்தமான சூழல்களும் விழுமங்களும் பெரியபுராணத்தில் பேசப்படுகின்றன.
தனிமனிதன், குடும்பம், நிறுவனம், உறவுகள், இயக்கங்கள், தொண்டு என்று பல்வேறு தளங்களிலும் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகளைப் பெரியபுராணம் பேசுகிறது. உள்மன ஆற்றல் பற்றி இன்று மேலை நாட்டுக் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு எத்தனையோ கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் நடைபெறுகின்றன. ஆனா உள்மன ஆற்றலின் அளப்பரிய பெருமையை ஒரு நாயன்மார்மீது வைத்துப் பேசுகிறது பெரிய புராணம்.
ஒரு புதிய தயாரிப்பை விளம்பரப்படுத்த தனியார் நிறுவனங்கள் தலை கீழாய் நிற்கின்றன. ஆனால் தன் மனங்கவரும் நாயகரை எல்லோரும் அறியச் செய்ய, வணிக நோக்கமின்றி வணங்கும் நோக்கம் மட்டுமே கொண்டு ஓர் அடியார் புகுத்திய புதுமைகளை நினைக்க நினைக்க வியப்பு தருகிறது. இன்றளவும் கூட, அரசியல் சட்டங்களுக்கும் தார்மீகச் சமயங்களுக்கும் இடையே பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. சில தவறுகள், சட்டப்படி பார்த்தால் தவறில்லை. ஆனால் தன்மை அடிப்படையில் தவறு என்று பேசப்படுகிறது. இந்த இரண்டில் எது சரி என்கிற கேள்விக்கும் பெரிய புராணத்தில் விடை கிடைக்கிறது.
இப்படி, வாழ்வின் அத்தனை போக்குகளையும் அடையாளம் கண்டு, தீர்வுகளைத் தெரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் பெரிய புராணம் கை கொடுக்கிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா