திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் உருவாக என்ன காரணம் என்ற கேள்விக்கு சேக்கிழார் சொல்லும் விடை முக்கியமானது. “உலகில், இரண்டு வகையான இருள் உண்டு. ஒன்று, பூமியைப் போர்த்துகின்ற புற இருள். இன்னொன்று மனிதர்கள் மனதைக் கவ்வும் அக இருள். கதிரவன், எப்படி புற இருளை நீக்குகிறதோ அது போல், அக இருளை நீக்குவது திருத்தொண்டர் புராணம்” என்கிறார் சேக்கிழார்.
“இங்கு இதன் நாமம் கூறின்
இவ்வுலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள்
சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப்
புறஇருள் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும்
திருத்தொண்டர் புராணம் என்பாம்.”
மனிதர்கள் மனதில் எப்போதெல்லாம் இருள் படிகிறதோ, அப்போதெல்லாம் அங்கே ஒளியை நிலை நாட்ட உற்ற துணையாய் திருத்தொண்டர் புராணம் திகழ்கிறது. ஏன் என்ற கேள்வி எழலாம். அறுபத்து மூன்று பெரியவர்களின் வாழ்க்கை இதில் பேசப்படுகிறது. அவர்கள் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்தவர்கள், எதிர்த்தவர்கள் என்று எல்லோரைப் பற்றியும் அழுத்தமான பதிவுகள் இதில் உள்ளன.
எனவே பலதரப்பட்டவர்களின் பட்டறிவு இதில் பதிவாகியுள்ளது. அடுத்தவர்களின் அனுபவங்களை நம்மை ஆற்றுப்படுத்த வல்லவை. வாழ்க்கை வரலாறு மேலை நாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் முன்னரே அவற்றின் இன்றியமையாமையை உணர்ந்தவர் சேக்கிழார். கால எல்லைகளைத் தாண்டியும் காலூன்றி நிற்பவை அழுத்தமான அனுபவங்கள் என்பதை அறிந்தவர் அவர்.
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
உலகம் முழுமைக்குமான பொதுத்தன்மை வாய்ந்தவன் இறைவன். அவனுடைய குணநலன்களை உலகம் முழுவதும் உணர வேண்டும். உணர்ந்தபின் ஓத வேண்டும். ஓதுவதன் மூலம் உணர்வது, ஒருவகை, உணர்ந்து ஓதுவது இன்னொரு வகை.
உலக வாழ்வுக்குப் பயன்படும் விதிகளையும், வாழ்க்கை முறைகளையும், ஓதி அதன் மூலம் உணரலாம்.
‘ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்’
என்ற திருக்குறளை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இறைத்தன்மை என்பது அனுபவத்தால் உணரப்பட வேண்டியது.
மரபின் மைந்தன் ம.முத்தையா