இன்றும் இறைநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்று இருப்பவர்களிடையே கருத்து மோதலும் யார் பெரியவர் என்கிற ஆணவப்போக்கும் ஒரு சில இடங்களில் தென்படுவதைக் காண்கிறோம். இறைவனுடைய தொண்டர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவும் பக்தியும் நிரம்பியவர்களாக விளங்க வேண்டும் என்பதைப் பெரிய புராணம் வலியுறுத்துகிறது.
தொண்டு நெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற யாருக்கும் இந்த பணிவின் அம்சம் பொருந்தும். முற்றிய நெற்கதிர்கள் வளைந்து நிற்பதைக் காட்ட வந்த சேக்கிழார்,
“தத்தமிழ் கூடினார்கள் தலையினாற் வணங்குமாற் போல்” என்று உவமையைச் சொல்கிறார். அடியார்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வணங்க விருப்பமாக இருந்தார்கள் என்பது இதனுடைய பொருள். நான்தான் பெரியவன் அவர் முதலில் வணங்கட்டும் என்று இன்று சில இடங்களில் காணப்படுகிற போக்கு அன்று அறவே இல்லை.
அடியார் பெருமக்களை ஆட்கொண்டது அன்புதான். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்று திருமூலரின் திருவாக்கை அவர்கள் வாழ்க்கையாகவே கொண்டிருந்தார்கள்.
அந்தத் தன்மைக்கு கண்கண்ட இலக்கியமாய் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் பேசப் படுகிறவர்கள் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும். அவர்கள் இருவரும் நான்கு முறை சந்தித்துக் கொள்கிறார்கள். அதிலும் முதல் முறையாக திருஞான சம்பந்தரின் சீர்மையினைக் கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் சீர்காழிக்குத் தேடிச் சென்று திருஞானசம்பந்தரை சந்திக்கின்றார். திருநாவுக்கரசர் வருவதைக் கேள்விப்பட்டு திருஞான சம்பந்தர் அவரை அடியவர் குழாத்துடன் பணிந்து வணங்கினார்.
திருநாவுக்கரசரை தன் தந்தையின் நிலையில் வைத்து “அப்பரே” என்று முதல் சந்திப்பிலேயே திருஞானசம்பந்தர் அழைத்தார்.
நிறைவாக அவர்கள் சந்தித்தது திருப்பூந்துருத்தி என்கிற திருத்தலத்தில். அங்கே மடம் அமைத்து திருத்தொண்டு செய்து திருநாவுக்கரசர் வீற்றிருந்த பொழுது அவர் திருப்பூந்துருத்தியில் இருப்பதை அறிந்து திருஞானசம்பந்தரின் முத்துச் சிவிகையினை தாங்கி வருபவராக தானும் வந்தார். திருப்பூந்துருத்திக்கு அருகில் வந்தது திருஞான சம்பந்தர் அப்பர் எங்கிருக்கிறார் என்று கேட்டதும் தங்கள் திருவடிகள் தாங்கும் பேருற்று இங்குற்றேன் என்றார். பதைபதைத்துப் போன திருஞானசம்பந்தர் சிவிகையில் இருந்து கீழிறங்கி, திருநாவுக்கரசை வணங்கினார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரை வணங்கினார்.
இந்த சம்பவங்கள் எல்லாமே பணிவு என்னும் தன்மை அடியார்களை எவ்வாறு ஆட்கொண்டிருந்தது என்பதை நமக்குக் காட்டுகின்றன.
மரபின் மைந்தன் ம.முத்தையா