அடியவர்களில் இறைவனுக்கு தோழர் என்ற நிலையிலே திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தம்பிரான் தோழன் என்றும் வன்தொண்டர் என்றும் போற்றப்பட்டவர் இவர். அவருக்கு சிவபெருமான் பலவகைகளிலும் ஒரு நண்பராகத் துணை நின்றிருக்கின்றனர். சுந்தரரின் புகழைக் கேள்விப்பட்ட ஒரு நிலக்கிழார் குண்டையூர் என்கிற ஊரில் இருந்தார்.
அவர் சுந்தரருக்கு வேண்டுகின்ற செந்நெல் பருப்பு முதலியவற்றை அவரது துணைவியாராகிய பரவை நாச்சியாரின் இல்லத்திற்கு அனுப்பி வந்தார். பஞ்ச காலத்தில் அவரால் முடியவில்லை. உடனே அவர் சிவபெருமான் வணங்க சிவபெருமான் குபேரனை ஏவி குண்டையூர் முழுவதும் நெல்லை மலை மலையாக குபேரன் நிறையச் செய்தான்.
விடிந்தெழுந்து இந்த விந்தையைக் கண்ட குண்டையூர் கிழார் நம்பியாரூரர்க்கு தகவல் தெரிவித்தார். இந்த நெல்லை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆட்களில்லாததால் அந்த ஆட்களையும் அனுப்பச் சொல்லி சுந்தரர் பதிகம் பாடினார்.
“நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே’’
என்று கேட்ட போது பூத கணங்கள் நெல்மணிகளை திருவாரூரில் சேர்த்தன என்று பெரிய புராணம் சொல்கிறது.
இதே சுந்தரருக்காக, அவர் விரும்பினார் என்பதாலேயே சிவநேசர்கள் கனவில் சிவ பெருமான் எழுந்தருளி பரவை நாச்சியாரை சுந்தரருக்கு மணமுடிக்குமாறு கட்டளையிட்டார்.
பங்குனி உத்தர நாள் நெருங்கிய போது பரவை நாச்சியாருக்குப் பொன் தேவைப்பட சுந்தரர் பதிகம் பாடினார். கோயிலில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவருக்கு தூக்கம் வந்தது. அருகிலிருந்த செங்கல்லை தலைக்கு வைத்துத் தூங்கினார். விழித்து பார்த்தபோது செங்கல் பொன்கல்லாக மாறியிருந்தது. அதே போல் நம்பியார் ஒருமுறை திருக்கருகாவூருக்கு சென்று கொண்டிருந்த போது பசியிலும் தாகத்தில் வருந்த வேதியர் வடிவில் வந்த சிவபெருமான் பொதி சோறும் கொண்டு வந்து தன் தோழருக்குத் தந்தார்.
இவ்வளவு தூரம் அன்பு பாராட்டிய தன் அருமை நண்பர் சுந்தரருக்கு முற்பிறவி தொடர்பால் சங்கிலியார் என்ற பெண்ணை திருவொற்றியூரில் கண்ட போது காதல் மலர்ந்தது. அவரை மணந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்து அதையும் சிவ பெருமானிடத்தில் கேட்டார். உணவு பொன், நெல் என்றெல்லாம் இறைவனிடத்திலே சுந்தரர் கேட்டார். என்னவாக இருந்தாலும் இறைவனிடத்தில் தவிர வேறு சரணா கதியில்லை என்று சுந்தரர் மனப்பான்மை காட்டுகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா