சங்கிலியாரின் கனவிலே சிவபெருமான் வந்து சுந்தரருடைய சிறப்புகளையெல்லாம் சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இவர் திருமணமானவர் என்று சங்கிலியார் சொல்லிக்காட்ட அவர் உன்னைப் பிரிந்து போகாத வண்ணம் உறுதிமொழி வாங்கிக்கொள். சத்தியம் வாங்கிக் கொள் என்று சிவபெருமான் சொன்னார்.

இதைச் சொன்னதே சிவபெருமான்தான் என்பதை அறியாமல் சுந்தரர் இருக்க சங்கிலியார் சத்தியம் கேட்கிறார். உங்கள் சன்னதியில் நான் சத்தியம் செய்தால் நான் அதை மீற முடியாது. எனவே நீங்கள் கோவிலுக்குள் இல்லாமல் மகிழ மரத்தின் அடியில் வந்து அமர்ந்துகொள்ளுங்கள் என்று சுந்தரர் சிவபெருமானிடத்தில் கேட்கிறார்.

இதை சங்கிலி நாச்சியாரிடம் சொன்ன சிவபெருமான் நீ அவரிடம் இந்தச் சின்ன விஷயத்திற்கு ஏன் சன்னதிக்குள் செல்ல வேண்டும். நீங்கள் மகிழ மரத்துக்கு கீழே வாருங்கள் என்று கேள் என்று சொல்லிக் கொடுத்தார். அதேபோல் நிகழ்ந்தது. வேறுவழியில்லாமல் சத்தியம் செய்து கொடுத்தார் சுந்தரர். “உன்னைப் பிரியேன்” என்கிற அந்த சத்தியத்தை வாங்கிக்கொண்டார்.

திருவாரூரில் வசந்தவிழா நெருங்கிய பொழுது திருவாரூர் இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் சுந்தரருக்கு தோன்றியது. எனவே திருவொற்றியூரை விட்டு அவர் வெளியேறினார். செய்த சத்தியத்தை மீறிய காரணத்தால் அவருடைய இரண்டு கண்களும் ஒளியிழந்தன. சிவனருளையே துணைக்கொண்டு இதனையும் போக்கிக் கொள்வேனென்று பதிகம் பாடினார். பலன் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் திருவாரூருக்கு போகவேண்டும் என்கிற தவிப்பு அவருக்குப் பெருகியது. சிலர் வழிகாட்ட அவர் திருமுல்லைவாயில் சென்றார். திருவெண்பாக்கம் தலத்திற்கு சென்று இறைவனே நீ இங்கு இருக்கிறாயா? என்று கேட்டார். இருக்கிறேன் நீ செல் என்று சிவபெருமான் சொல்லியது, அவர் உள்ளத்தைப் புண்படுத்தியது.

என்ன செய்தாலும் என்னை ஆட்கொள்ள வேண்டிய இறைவனல்லவா நீ. உள்ளே இருந்து கொண்டே இருக்கிறேன். போ! என்ற குரல் கொடுக்கலாமா என்கிற ஆதங்கத்தோடு பதிகம் பாடினார்.

“செய்வினை ஒன்று அறியாதேன்
திருவடியே சரண் என்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திட நீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தாயோ என்னை
பணிந்து என்னை
உய்ய அருள்செய்ய
வல்லான் உளோம் போகீர் என்றானே”

என்று மனம் வருந்தி பதிகங்கள் பாடினார். காஞ்சிபுரத்தை அடைந்து திருஏகாம்பரர் முன் நின்று இறைவனே எனக்கு கண்கொடு என்று வேண்ட இடது கண்ணை மட்டும் இறைவன் அருளினான்.

“கம்பன் எம்மானை காணக்
கண்ணடியேன் பெற்றவாறே” என்று பாடினார்.

பிறகு தலம் தலமாக வழிபட்டுக் கொண்டே வந்த இடத்தில் திருந்துருத்தி என்கிற தலத்தில் ஒரு தீர்த்தத்தில் மூழ்குமாறு இறைவன் அருளிச் செய்ய அவருடைய பிணிகள் நீங்கின. ஆனால் ஒரு கண்தான் இருந்தது. வெவ்வேறு தலங்களை வழிபட்டுக் கொண்டு திருவாரூர் நுழைந்து தியாகேச பெருமானை கண்டு வழிபட்டு இந்த இன்னொரு கண்ணை வைத்துக் கொண்டு நீங்களே நன்றாக இரும் என்று நிந்தாத்துதியாகப் பாட தன் தோழருக்கு வலது கண்ணை வழங்கினார் சிவபெருமான் என்று சேக்கிழார் புராணம் சொல்கிறது.

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்த சேதி கேட்டு பரவையார் சுந்தரை வரவேண்டாம் என்று மற்றவர்கள் வாயிலாக சொல்லித் தடுக்க, சிவபெருமான் சுந்தரருக்காக தூது சென்றார் என்பதை சேக்கிழார் சொல்கிறார்.

எவ்வளவுதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் செய்த சத்தியத்திலிருந்து விலகும்போது தண்டிக்கிறான் தலந்தோறும் சென்று பதிகம் பாடியதால் மன்னிக்கிறான் என்பதை சுந்தரர் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *