இன்று அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக உள்ள உறவினர்களும் நண்பர்களும் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறபோது தங்கள் தொடர்புகளை துணையாகக் கொண்டே தண்டனைகளில் இருந்து தப்பிகிற காலத்தில் இறைவனுக்கே இனிய நண்பராக விளங்கினாலும் செய்து கொடுத்த சத்தியத்திலிருந்து சற்றே மீறினாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், எவ்வித பாரபட்சமும் இல்லாமல் தண்டனை அவர்களுக்குத் தரப்படும் என்பது இறைவனுடைய தீர்ப்பு. இதை மனதிலே கொள்பவர்கள் நெறி நீங்கி நடக்க மாட்டார் என்பதாலேயே தம்பிரான் தோழராகிய சுந்தரர் வரலாற்றில் இந்த செய்தியை மிக அழுத்தமாக சேக்கிழார் பதிவு செய்கிறார்.

ஒரு நண்பர் செய்கிற சின்னச் சின்ன குறும்புகளுக்கு அவருடைய நண்பர் துணை போவது என்பது இயல்பு. சங்கிலியாரை விரும்புகிறபோதும், அதற்குமுன் பரவையாரை விரும்பிய போதும் அதற்கு துணையாக இருந்தவர் சிவபெருமான். தான் இசைத் தமிழால் இறைவனை பாடிய போது அந்த இசையின் வடிவாகவும் இசை தருகிற பயனாகவும் இறைவனை உணர்ந்தவர் சுந்தரர். இந்த இரண்டு நிலைகளையும் கடந்து இறைவனை தன்னுடைய தோழர் என்று வெளிப்படையாகவே அவர் பிரகடனம் செய்கிறார். தான் செய்த சின்னச் சின்னச் குறும்புகளுக்கு இறைவன் துணை நின்றதையும் பரவை நாச்சியாரை மணம் செய்ய உதவியதும் தன்னால் மறக்க முடியாது என்று தன்னுடைய திருப்பதிகத்திலேயே சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுகிறார்.

“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாலை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே”

என்று சுந்தரர் பாடுகிறார்.

இறைவனுக்கே நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் அறநெறி வழுவுகிறபோது தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது அதிகாரத்தின் பெயரால் சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடிய 21ஆம் நூற்றாண்டுக்கு படிப்பினையாய் விளங்கக் கூடிய பெரிய சிந்தனை.

நாயன்மார்கள் காலத்தில் சாதி சமய வேறுபா-டுகள் இல்லை என்பதையும் பெரிய புராணத்தின் மற்றொரு மையச் செய்தியாக முன்னரே பார்த்தோம். சாதிய கட்டமைப்பில் உயர்சாதி எனக் கருதப்படுவது அந்தணர் மரபு. அந்தணர்களைக் குறிப்பதற்கு ஐயர் என்று சொல் வழக்கில் இருக்கிறது. பெரிய புராணத்தில் ‘ஐயர்’ என்கிற சொல்லை ஐந்து முறைதான் சேக்கிழார் பயன்படுத்துகிறார் என்று அறிஞர் அ.சா.ஞானசம்பந்தன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஐந்து முறையில் மூன்று முறை திருஞானசம்பந்தர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட திருநீலகண்டயாழ்ப்பாணரை அழைப்பதற்கு ‘ஐயர்’ என்ற சொல்லை பயன் படுத்துகிறார். அதேபோல தில்லை வாழ் அந்தணர்கள், பிறப்பால் நந்தனாரை அழைப்பதற்கும் ஐயர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஐயர் என்ற சொல் வேட்டுவ குலத்திலே பிறந்த கண்ணப்பரை குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக எண்ணப்படுகிற திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், நந்தனாரையும், கண்ணப்பரையும் அழைப்பதற்கு மட்டுமே ‘ஐயர்’ என்ற சொல்லை சேக்கிழார் பயன்படுத்துகிறார் என்பது அவருடைய பொதுநோக்கை வெளிப்படுத்துகிறது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *