இறையடியார்களாக இருப்பாரேயானால் மாட்டுக் கறியைத் தின்கிற புலைசாதியில் பிறந்திருந்தாலும் அவர்களும் நம்மால் வணங்கத்தக்கவர்கள் என்கிற கருத்தை திருநாவுக்கரசர் பாடுகிறார்.
“அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவூரித்துத் தின்றுழலும் புழையேரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”
என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.
அதே போல பரத்தையர் குலத்தில் பிறந்த பரவையாரையும், வேளாளர் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு முன்பாக வணிகர் குலத்தில் பிறந்த சிவநேசர் என்பவர் தன்னுடைய மகளை திருஞானசம்பந்தருக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டினைக் கொள்கிறார். இவையெல்லாம் வெறும் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு பரந்தபட்ட பார்வையோடு பேதம் பாராட்டாத உள்ளத்தோடு அடியார்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளங்களாகும்.
சமணர்களின் பிடியிலே இருந்து அவர்களின் சூதுவயப்பட்ட அல்லல்களுக்கு ஆளாகி இறைவனின் அருளாலே மீண்டவர் திருநாவுக்கரசர். சமண சமயத்தின் ஆதிக்கம் தலைதூக்கி இருந்த மதுரை நோக்கி திருஞானசம்பந்தர் செல்ல முற்பட்ட போது சமணர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தால் திருஞானசம்பந்தரை தடுக்க முற்பட்டார் திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் பால் கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக நாளும் கோளும் நன்றாக இல்லை என்று அவர் சொன்னபோதுகூட இறையடியார்களுக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் என்று திருஞானசம்பந்தர் கோளறுதிருப்பதிகமே பாடுகிறார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அமர்ந்தென்
உளமேபுகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே”
இறை நம்பிக்கையில் உறுதிப்பாடு உள்ளவர்கள் நாள் கோள் போன்ற நம்பிக்கைகளில் மனமயங்க மாட்டார்கள் என்பதை இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்த அருணகிரிநாதரும்,
“நாளும் செயும் வினை நான் என்செயும் எனை நாடி வந்த
கோள் என்செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
சமண நம்பிக்கை ஏன்பதுவே மூட நம்பிக்கை ஏன்று பொத்தாம் பொதுவில் பேசுகிறவர்கள் சமய மேன்மை குறித்து சமய உணர்வால் மனிதர்கள் பெறுகிற மனப் பக்குவம் குறித்து ஒன்றும் அறியாதவர்கள் என்று தெரிகிறது.
சமயம் என்ற சொல்லுக்கே பக்குவப்படுத்துதல் என்று பொருள். சுயநலம், மூடநம்பிக்கைகள், பேதம் பார்க்கிற பார்வை போன்ற குணங்களால் பீடிக்கப்பட்ட உள்ளத்தை அந்தக் குறைகளை எல்லாம் களைந்து பக்குவப்படுத்துவதற்குத்தான் சமயம் ஏன்று பெயர். சைவ சமயம் அத்தகைய பரிபக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும்சமயமாக விளங்குகிறது என்கிற உண்மையை கால மாற்றத்திற்கேற்ற பக்குவத்தை மனிதர்களுக்கு அது தருகிறது என்ற மகத்துவத்தை சேக்கிழாரின் பெரியபுராணம் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா