இன்றளவும் உலக சமுதாயம் முழுமையிலும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் சட்டப்படி தவறு என்று சிலவும், தார்மீகப்படி தவறு என்று சிலவும் பேசப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட சட்டங்களின்படி ஒரு மனிதரின் செய்கை குற்றமில்லை என்று தீர்ப்பாகிவிடலாம். ஆனால் அந்த மனிதரை அந்த குற்றத்திற்காக சமூகம் மன்னிக்காமல் தள்ளி வைப்பதும் உண்டு. வரையறுக்கப்பட்ட சட்டங்களைவிட வாழ்வியல் சட்டங்கள் வலிமை யானவை என்பதை இந்த நோக்கு உணர்த்துகிறது. இந்த இரண்டு வகைச் சட்டங்களில் எது சரி என்பதை வெவ்வேறு நிலைகளில் சேக்கிழார் விரிவாகப் பேசுகிறார்.
மெய்ப்பொருள் நாயனார் என்கிற ஓர் அரசரின் கதை நமக்குத் தெரியும். சிவ வேடம் தரிக்கக்கூடியவர்களை அவர் சிவனடியார்களாக எந்த நிபந்தனையும் இன்றி நெஞ்சார ஏற்றுக் கொள்வார். அவரோடு போரிலே மோதி வெல்ல முடியாத பகை புலத்து அரசன் முத்தநாதன் சிவனடியார் போல் வேடமிட்டு வந்து அவர் உயிரைக் கவர்கிறார். அரசரின் பாதுகாவலனான தத்தன், சிவனடியார் வேடமிட்ட முத்தநாதன் மீது பாயத் தலைப்படுகிறபோது அவர் நம்மவர் என்று பாதுகாவலனை தடுக்கிறார் அரசர். முத்தநாதனை பாதுகாப்போடு ஊர் எல்லையில் விட்டுவிட்டு வருமாறு பணிக்கிறார் காவலனை.
இந்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் தொடக்கத்தில் அவர் எத்தகையவர் என்பதை சொல்ல வருகின்ற சேக்கிழார்,
“அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுஞ் தோளால் வென்று
மாற்றளர் முனைகள் மாற்றி
வரைதிறம்பாத நீதி
அங்கு நீர்மையின் மிக்கார்
திரைசெய் நீர்ச் சடையான்
அன்பர்வேடமே சிந்தை செய்வார்” என்று பாடுகிறார்.
இதில் முதல் வரி மிகவும் முக்கியம் என்பது என்னுடைய கருத்து.
“அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து”
என்ற தொடருக்கு இருவேறு விதங்களில் நாம் பொருள் கொள்ளலாம். அறநெறியை அடிப்படையாகக் கொண்டு வந்த அரசியல் நெறி என்றும் சொல்லலாம். அப்படிப் பார்த்தால் அரசியல் சட்டத்தின்படி கொலை செய்த ஒருவன் கைது செய்யப்படுவதுதான் முறை. ஆனால் திரைசெய்நீர்ச் சடையான் அன்பர் வேடத்தையே சிந்தை செய்து வழிபடக்கூடிய மெய்ப்பொருள் நாயனார் அரசியல் நெறியை விட சிவனடியார்களைக் கொல்லக்கூடாது என்கிற அறநெறியை அடிப்படையாகக் கொண்டார் என்று கொள்ளலாம்.
இதில் பொதுத்தன்மைக்காக சிவனடியாரை விட்டு விட்டு நீங்கள் சிந்தித்தால்கூட அரசியல் நெறியைவிட அறநெறி வழாமல் காப்பதுதான் முக்கியம் என்கிற பொருள் இதிலே நமக்குக் கிடைக்கிறது.
“அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து”
இங்கே அரசியல் சட்டத்தைவிட தார்மீகச் சட்டம்தான் தலையெடுக்க வேண்டும் ஒரு சமூகத்தில் என்ற கருத்து வெளிப்படுகிறது. முத்தநாதனை விட்டுவிட்டு யோசித்தால் இந்த ஒரு வரி ஒரு பெரும் வழிகாட்டுதலாக இருப்பதைப் பார்க்கிறோம்.
<strong>மரபின் மைந்தன் ம.முத்தையா</strong>