திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலேயே மனுநீதிச் சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதுகிறார். அரசர்கள் உலவக்கூடிய வீதியில் பசுவோ அதன் கன்றோ புகுவதற்கு வாய்ப்பில்லை. சுற்றி நிறைய தேர்கள் சூழ்ந்து வர மனுநீதிச் சோழனின் மகன் தேரிலே வருகிறார். இந்த காலத்தில் அமைச்சர்கள் வருகின்ற வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு வருவதுபோல் அன்று இளவரசனின் தேரிலும் இவனைச் சுற்றி வருகின்ற தேர்களிலும் பெரும் ஓசையை எழுப்பக்கூடிய மணிகள் அசைந்து கொண்டே வருகின்றன.
அந்த வீதிக்குள் கன்று வந்ததும் எழுப்பப்பட்ட ஒலிகளை எல்லாம் புறக்கணித்து குறுக்கே பாய்ந்ததும் மற்ற தேர்களையெல்லாம் விட்டுவிட்டு அரசனின் மகனுடைய தேரில் அகப்பட்டுக் கொண்டதும் போக்குவரத்து விதிகளின்படி பார்த்தால் ஒரு விபத்துதான். சட்டப்படி பார்த்தால் இளவரசன் ஒரு நிரபராதி. ஆனால் இதனை சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் தார்மீக அடிப்படையில் மனுநீதிச் சோழன் சிந்திக்கிறான்.
முதல் தகவல் அறிக்கையை அரசனிடத்தில் கொண்டு வந்து சமர்ப்பிக்கின்ற அமைச்சர்கள் சட்டரீதியாக இளவரசன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை இந்த அழகான வருத்தத்திலேயே அடிகளாக்கித் தருகின்றார்கள். பாடல் இதுதான்.
“வளவ நின் புதல்வன்
ஆங்கோர் மணிநெடும் தேர்மேல் ஏறி
அளவில் தேர்ச்சேனை சூழ
அரசுலாம் தேரில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந்து இறந்தது”
நுணுக்கமான சட்டத் தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மணி ஒலிக்கின்ற தேர். சுற்றிலும் நிறைய தேர்கள் அரசர்கள் மட்டுமே போக வேண்டிய வீதி. அதிலே தானாக வந்து தேர்க்காலிலே இடைபுகுந்து கன்று இறந்து போகின்றது. அந்தக் கன்றினுடைய தாய்ப்பசு மனுநீதிச் சோழனின் அரண்மனையில் வந்து ஆராய்ச்சி மணியினை அசைக்கின்றது. இதில் இருக்கின்ற சட்ட நுணுக்கங்களை அமைச்சரை விட நன்றாக உணர்ந்தவன் மனுநீதிச் சோழன்.
சட்டரீதியாக தன் மகன் மேல் தவறில்லை என்றால்கூட அவனுடைய உள்ளத்தில் தார்மீக ரீதியாக இந்த குற்றத்திற்கு தானும் தன் மகனும் பொறுப்பேற்க வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது.
“தன்னிளம் கன்று காணாத்தாய் முகம் கண்டு சோரும்” என்கிறார் சேக்கிழார். பசுமாடு நல்லவேளையாக படிக்கவில்லை. இது அரசியல் சட்டங்களையோ போக்குவரத்து விதிமுறைகளையோ அறியாதது. அதனை நீங்கள் பேசி சமாதானப்படுத்த முடியாது என்பதனாலேயே இந்த வழக்கை மூடிவிடலாம். ஆனால் தன்னிளம் கன்று காணாத்தாய் முகம் கண்டு சோர்கிற அரசன் தார்மீகமாக பொறுப்பேற்கிறான்.
ஓர் அரசன் ஆட்சி புரிகிற போது அங்கே வாழும் உயிர்களுக்கு தன்னாலோ, தன் பரிவாரங்களாலோ தன் பகைவர்களாலோ, கள்வர்களாலோ, பிற உயிரினங்களாலோ தீங்கு நேராமல் காக்க வேண்டும் என்கிறான்.
“மானிலம் காவல் ஆவான்
மன்னுயிர் காக்கும் காலை
தான் அதற்கு இடையூறு
தன்னால் தன்பரிசனத்தால்
ஊனமிகு பகைதிறத்தால் கள்வரால்
உயிர்கள் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து
அறங்காப்பான் அல்லனோ”
இந்த ஐந்து வகையான அச்சங்களில் இருந்தும் எல்லா உயிர்களையும் என் ஆட்சியில் விடுவித்து காப்பது என் பொறுப்பு. ஒருவன் ஓர் உயிரை எடுப்பானேயானால் பதிலுக்கு அவன் உயிரை எடுப்பது, என்பது என்னுடைய முடிவு என்கிறான் மனுநீதிச்சோழன்.
மரபின் மைந்தன் ம.முத்தையா