சட்டப்படி தவறில்லை என்றாலும் தார்மீகப்படி ஒன்றைத் தவறு என்று அரசன் முடிவு கட்டுகிறபோது அவனை சமாதானப்படுத்துவதற்கு அமைச்சர்கள், “இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். ‘இதற்கு சில பரிகாரங்களைச் செய்யலாம்’ என்று நம்முடைய அந்தணர்கள் சில முறைகளை வகுத்துள்ளார்கள்” என்று அடித்துப் பேசுகிறார்கள்.
“சிந்தை தளர்ந்த அருளுவது மற்றிதற்குத் தீர்வு என்றால்
கொந்தவர்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை வழிநடத்தல் அறம்” என்றார்.
பசுவதை என்பது ஒன்றும் புதிதில்லை. பசுவை வதை செய்தவர்களுக்கு என்று சில பரிகாரங்கள் அந்தணர்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பரிகாரங்களைச் செய்தாலே போதும் என்று சொன்ன மாத்திரத்தில் மனுநீதிச் சோழன் அவர்களைப் பார்த்து இன்னொரு கேள்வி கேட்கிறான்.
இந்தப் பரிகாரம் யாருக்குப் பரிகாரம்? தவறு செய்த என் மகன் மனநிம்மதி பெற இது பரிகாரமாகலாம். மகன் செய்த தவறுக்கு கழுவாய் தேடிய நிம்மதி எனக்கு இதில் தோன்றலாம். ஆனால் இந்தப் பரிகாரங்கள் தன் இளம் கன்றை இழந்து அலறி என்னுடைய ஆராய்ச்சி மணியை அசைத்திருக்கிறது இந்தப் பசுமாடு. இதனுடைய துன்பத்திற்கு பரிகாரமாகுமா என்று திருப்பிக் கேட்கிறார் மன்னன்.
“வழக்கென்று நீர்மொழிந்தால்
மற்று அதுதான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்து அலறும்
கோவுறு நோய் மருந்தா மோ”
என்று கேட்டதோடு மனுநீதிச் சோழன் நிறுத்தவில்லை அடுத்தாற்போல் ஒன்று கேட்கிறான். நீங்கள் சொல்லுகின்ற இந்த வழக்கத்தை நான் ஏற்றுக் கொண்டால் இங்கு தர்மத்துக்கு இடமில்லை என்று தர்மதேவதை சலித்துக் கொள்வாள் என்கிறார்.
எனவே, சட்டபூர்வமான சாட்சி ஆகட்டும், அறநூல்களால் சொல்லப்பட்ட சாட்சியாகட்டும், அவற்றைவிட எல்லாம் வலியது மனசாட்சி என்பதை மனுநீதிச் சோழனுடைய வரலாற்றின் வழியாக சேக்கிழார் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.
எவ்வளவு பரிகாரங்களை யார் யார் சொன்னாலும் தன்னுடைய மனம் அதற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் கடைசி வரை அந்த வருத்தம் மனதிற்குள்ளே வடுவாக இருக்கும் என்பதை திருவள்ளுவர்,
“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்கிற திருக்குறளுக்கு இலக்கணமாக மனுநீதிச் சோழனை நாம் இங்கு பார்க்கிறோம்.
இதில் இன்னொன்றும் இருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் சரி என்று தெரிகின்ற ஒன்று தார்மீகப்படி தவறு என்று கொள்ளப்படுவது போலவே சட்டப்படி தவறு என்று கருதுகின்ற ஒன்று தார்மீகப்படி சரி என்று கருதுவதற்கும் இடம் இருக்கின்றது.
மரபின் மைந்தன் ம.முத்தையா