வழக்கமாக அப்பூதியடிகள் புராணங்களில் பேசப்படுகின்ற விஷயங்களைக் கடந்து அதில் ஒரு சம்பவத்தை நாம் ஆராய்வோமேயானால் சேக்கிழார் ஒரு மிகப் பெரிய உளவியல் அறிஞராக விளங்குவதை அறியலாம்.
திங்களூர் என்கிற ஊரில் வசித்து வருகிறார் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள்ளே வருகிறார். காணும் இடங்களில் எல்லாம் தன்னுடைய பெயரால் அறப்பணிகள் நிகழ்வதைப் பார்த்து வியப்படைகிறார் திருநாவுக்கரசர்.
“சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாம்கண்டார்”
என்பது சேக்கிழார் வாக்கு.
அங்கிருந்த திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தலின் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, “இப்பந்தல் இப் பெயரிட்டு இங்கு அமைத்தார் யார்?” என்று திருநாவுக்கரசர் கேட்க அப்பூதியடிகள் இதை அமைத்தார் என்ற தகவலோடு இதே திருநாவுக்கரசர் பெயரில் சாலைகள், குளங்கள், சோலைகள் என்றெல்லாம் அப்பூதியடிகள் அமைத்துள்ளார் என்ற தகவலை அவர்கள் தருகிறார்கள்.
அவர் எங்கே இருக்கிறார் என்று திருநாவுக்கரசர் வினவுகிறார். இப்பொழுதுதான் வீட்டிற்கு போனார். அதுவும் தூரம் தொலைவாக இல்லை. பக்கத்தில்தான் இருக்கிறது என்று சொல்லி அவர் வீட்டிற்குப்போவதற்கான வழியையும் சொல்கிறார்கள்.
அப்பூதியடிகள் வீட்டிற்கு திருநாவுக்கரசர் சென்றது, அதற்குப்பின் அங்கே நிகழ்ந்த அற்புதங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
எண்ணில் அடங்காத மக்கள் வந்து செல்லக்கூடிய வழியில் தன் உள்ளம்போல் குளிர்ந்த தண்ணீர்ப் பந்தலை நிழல்மிக்க இடமாக அமைந்திருக்கிறார் அப்பூதியடிகள் ஏதோ பெயரளவில் செய்த பணியில்லை அது. முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொன்றையும் அமைத்திருக்கிறார். அவரை இன்னார் என்று அறியாத திருநாவுக்கரசர், அவரைப் பற்றிக் கேட்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் பெயர் அப்பூதியடிகள் என்று தொடங்கி தரப்பட்ட தகவல்களோடு அவர் விடைபெற்று போயிருக்கலாம்.
அப்பூதியடிகள் யார்? அவரை எங்கே பார்க்கலாம் என்று வழி தேடிக்கொண்டு வீட்டிற்கே போய்ப் பார்க்கிறார் திருநாவுக்கரசர். மேலோட்டமாகப் பார்த்தால் தன்னுடைய பெயரில் ஒருவர் தொண்டுகள் செய்வதை உணர்ந்து அவர் யார் என்று தெரிந்து கொள்கின்ற ஆர்வம் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்டுவிட்டதோ என்று தோன்றும். பெயர் என்கிற ஒன்று திருநாவுக்கரசருக்கு எப்போதுமே போதை தரக்கூடிய ஒன்றாக இருந்ததில்லை.
பிள்ளைப் பருவத்தில் பெற்றோர் அவருக்கு மருள் நீக்கியார் என்று பெயர் வைத்தார்கள். சமண சமயத்திற்குப்
போன பிறகு அவரது புலமையையும் தகைமையையும் கண்ட பிறகு சமண சமயத்தவர், ‘தங்களின் மேலாம் தருமசேனர்’ என்று அவரை தர்மசேனரே என்று அழைத்தனர். சைவத்திற்குத் திரும்பிய பிறகு அவருக்கு சிவபெருமானே, ‘திருநாவுக்கரசர்’ என்ற திருநாமத்தைச் சூட்டினார். ஆளுடையபிள்ளையோ அவரை அப்பரே என்று அழைத்து அகம் நெகிழ்ந்தார். எனவே பெயர்கள்கூட மாறிக்கொண்டு வருகின்ற விதமாய் பக்குவமாய் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவர் திருநாவுக்கரசர்.
இறைவன்பால் ஈடுபடுகின்றபோது தன்னுடைய பெயர் என்ற ஒன்றே மறந்துவிடும் என்பதை உலகுக்குச் சொன்னவர் அவர்தான். சிவபெருமான் மீது காதலுள்ள ஒரு பெண்ணின் தன்மை என்னவாக இருந்தது என்று எழுதுகிறபோது,
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் தன் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.
எனவே இறைவனிடம் ஈடுபட்ட இதயம் தன்னுடைய பெயர், தன்னுடைய ஏர் போன்ற அடையாளங்களைத் தாண்டியது என்பது அந்த ஞானிக்கு ஏற்பட்ட ஆனுபவம். அப்படி இருக்கிறபோது தன்னுடைய பெயரை வைத்திருப்பதினாலேயே அப்பூதியடிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்கொண்டு அவர் வீடுதேடிப் புறப்பட்டார் திருநாவுக்கரசர் என்பதை நம்மால் ஏற்க முடியாது.
மரபின் மைந்தன் ம.முத்தையா