சிவகாமி ஆண்டார் பூக்குழலை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்டு அந்த பூக்குழலைப் பிடுங்கி காலாலே துவம்சம் செய்கிறது. இறைவனுக்குரிய மலர்கள் இப்படி தெருவில் இறைந்துபட்டனவே என்ற வருத்தத்தில் சிவகாமி ஆண்டார் ஓலக்குரல் எழுப்ப அந்தக் குரல் கேட்டு எறிபத்தநாயனார் அங்கே எழுந்தருள்கிறார்.
எங்கெல்லாம் சிவனடியாருக்குத் துன்பம் நேர்கிறதோ அங்கெல்லாம் அந்தத் துன்பத்தை நீக்கும் பொருட்டு கையில் மழுவோடு அங்கே சென்று சேருவார் எறிபத்தர்.
இன்று அவசரப் போலீஸ் என்று அழைக்கக் கூடிய ஏண்ணை வெளியிட்டிருக்கிறார்கள். சிவனடியார்களுக்கு ஊறு நேரும்போது அவர்கள் குரல் கொடுத்தாலே அந்த அவசர அழைப்புக்கு ஓடோடி வருபவராக எறிபத்த நாயனார் விளங்கி இருக்கிறார்.
வந்து பார்த்தவருக்கு என்ன நடந்தது ஏன்று புரிந்தது. சிவபெருமானை பூசிக்கக்கூடிய மலர்களை சிவனடியார் அஞ்சுமாறு கைகளில் இருந்து பறித்த யானையை எறிபத்தரால் மன்னிக்க முடியவில்லை. உடனே பாய்ந்து அந்த யானையை தன் மழுவாலே வெட்டுகிறார். யானை கீழே விழுந்து புரண்டு இறந்துவிடுகிறது. அந்த யானை இறப்பதற்குள்ளாக அங்கிருந்த யானைப்பாகர்கள் யானையோடு உடன் வந்த காவலர்கள் என்று எல்லோரையும் எறிபத்தர் கொன்று குவிக்கிறார்.
இந்தச் சம்பவத்தை சேக்கிழார் இப்பொழுது பதிவு செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நடைபெறுமேயானால் உள்ளபடியே என்ன நடந்தது என்பதைக் காவல்துறையினர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிந்துகொள்வார்கள்.
ஒரு கொலை நடக்கிறது என்றால் அந்தக் கொலை எப்படி நடந்தது. யார் செய்தார்கள். முதலில் யாரை வெட்டினார்கள். பிறகு யாரை வெட்டினார்கள். அதனால் வெட்டுண்டவர்களின் எண்ணிக்கை என்ன என்கிற விவரங்கள் எல்லாம் நிரல்பட எழுதப்படுமேயானால் அது முழுமையான முதல் தகவல் அறிக்கைக்கோர் இலக்கணம்.
அப்படி ஒரு முதல் தகவல் அறிக்கையினை சேக்கிழார் எறிபத்த நாயனார் புராணத்திலே பதிவு செய்கிறார்.
முதல் யானையினுடைய தும்பிக்கையை எறிபத்தர் வெட்டுகிறார். மலைபோன்ற யானை கீழே விழுந்து கடல் போல கதறுகிறது. நடந்த சம்பவத்திற்கு யானை மட்டும் பொறுப்பல்ல. யானையினுடைய பாகர்கள், அதற்கு வந்த காவலர்கள் அனைவருமே பொறுப்பு என்பது எறி பத்தருடைய எண்ணம். எனவே அரசனுடைய பட்டத்து யானையைக் கொன்று யானையுடன் வந்த மூன்று பாகர்கள் துணைக்கு வந்த காவலர்கள் என்று எல்லோரையும் கொல்கிறார்.
எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை யூகமாகவோ குத்துமதிப்பாகவோ முதல் தகவல் அறிக்கையில் எழுத முடியாது. மிகத் துல்லியமான தகவல்களை ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிற பாங்கிலே சேக்கிழார் பாடலாகப் பாடுகிறார்.
“கையினை துணித்த போது
கடலென கதறி வீழ்ந்து
மைவரை அணைய வேதம் புரண்டிட
மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர்
மிசை கொண்டார் இருவர்ஆக
ஐவரை கொன்று நின்றார்
அருவரை அனையத் தோழார்”
என்பது சேக்கிழாருடைய வாக்கு.
முதலில் யானையினுடைய துதிக்கையை வெட்டிய உடன் மலை போல் பெரும் வடிவம் கொண்ட யானை கீழே விழுந்து கடல்போல் கதறி அழுதது. அந்த அழுகை ஒலி அடங்கும் முன்பாக எறிபத்தர் மூன்று பாகர்களையும் உடன் வந்தவர் இருவரையும் ஆக ஐந்துபேரை கொன்றார் என்பது சேக்கிழார் பதிவு செய்கிற புள்ளி விபரம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா