‘ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்’ என்கிறார் சேக்கிழார். அது எப்படி ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே பார்ப்பது என்றால், அதற்கு திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் ஓர் ஆதாரம் இருக்கிறது.
நாவுக்கரசரின் பற்றற்ற மனப்பான்மையை வெளிப்படுத்த விரும்பிய இறைவன் ஒரு காரியம் செய்தான்.
ஆலயங்கள் தோறும் கல்லை அகற்றி புல்லை அகற்றி தன் கையில் இருக்கின்ற உழவாரப் படை கொண்டு உழவாரப் பணிசெய்பவர் திருநாவுக்கரசர். அப்படி மண்ணில் இருக்கிற புல்லையும் கல்லையும் சீர்படுத்திக் கொண்டிருக்க அவர் மண்ணை தோண்டத் தோண்ட ரத்தினங்களும் மணிகளுமாக வந்தனவாம்.
அவற்றில் எவ்வித ஈடுபாட்டையும் பாராமல் பொன்னையும் மணியையும் ஒருபுறமாகக் கொண்டு கொட்டினார் திருநாவுக்கரசர் என்பது சேக்கிழார் வாக்கு. இதைச் சொல்கிறபோது ஒரு நுட்பத்தையும் சேர்த்தே விளக்குகிறார் சேக்கிழார். கல்லையும் புல்லையும் தோண்டி எடுக்கும்போது பொன்னையும், மணியையும் பார்க்கிறார் திருநாவுக்கரசர். இது கல் இது பொன் என்கிற வேற்றுமையை அவர் சொல் அளவில்தான் அறிந்திருந்தாராம். ஆனால் அவற்றிற்காக மதிப்பு நிலையில் எந்த வேறுபாட்டையும் அவர் பார்க்கவில்லை.
பொன் வேறு கல் வேறு என்று புத்திக்கு புரிகிறது. ஆனால் இது அதனினும் உயர்ந்தது, இது அதனினும் தாழ்ந்தது என்கிற பார்வை அந்த அருளாளர் இடத்திலே இல்லை.
“புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபாடு இலா
நிலைமை தொலைந்திருந்த நல்லோர்”
என்று சேக்கிழார் இதை விளக்குகிறார். தொண்டர்களுக்கு பொது இலக்கணம் வகுக்கிற பொழுது தொண்டர்களுடைய தன்மைகளைப் பார்க்கும் போது, ‘ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்’ என்று சொன்னதனுடைய விரிவு திருநாவுக்கரசர் புராணத்தில் உள்ளது.
நம் காலத்திலும் அத்தகைய தொண்டர்களைக் கண்டிருக்கிறோம். மார்க்ஸிய இயக்கத்தின் மிகப்பெரிய தலைவராக விளங்கியவர் அமரர் ஜீவானந்தம் அவர்கள். தான் சார்ந்திருந்த இயக்கத்தின் பணி நிமித்தமாக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டவர். தான் செல்லவேண்டிய ஊரை சென்றடைந்தவுடன் தோழர்களைக் கண்டு தனக்கு கடுமையாகப் பசிக்கிறது என்று சொல்லி இரண்டு மூன்று இட்-லிகளை வாங்கித்தரச் செய்து உண்டார்.
பசியாறிய பிறகு இயக்க அலுவலகத்துக்கு போனதும் பைக்குள்ளே கைவிட்டு கத்தை கத்தையாக பெரும் தொகையை கட்சி நிதிக்கு என்று சேர்ப்பித்தார். அந்தப் பணத்தைத்தான் தந்துவிட்டிருக்கிறார்கள் ஜீவாவிடம்.
பசி ஏற்பட்டபோது பையில் கையில் இருக்கும் பணத்தை உபயோகித்து சாப்பிட்டு இருக்கலாம் என்பதை அவர் அறியாதவர் அல்லர். ஆனால் அவரைப் பொறுத்தவரை அது கட்சிக்கான நிதி என்கிற கவனத்தில் பணம் இருக்கிறது என்கிற நினைப்பையே அவர் மாற்றியிருக்கிறார். ஒரு பக்கத்தில் தனது பையில் வைத்திருக்கிற எத்தனையோ காகிதங்களைப் போலத்தான் இந்த பணத்தையும் அவர் பார்த்திருக்கிறார்.
“ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்” என்கிற தொண்டர்களுக்கான இலக்கணம் எந்தக் காலத்திலும் தொண்டு மனப்பான்மை உள்ளவர் இடத்திலேயெல்லாம் செயல்படும் என்பதற்கு இது ஓர் அடையாளம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா