இவற்றை தாண்டி தொண்டர்களுடைய அரிய இலக்கணம் ஒன்றையும் சேக்கிழார் சொல்கிறார். ஒருவன் இறைவன் இடத்திலே பக்தி செலுத்துவதுகூட பயன் கருதி அமையக் கூடும். எல்லா பற்றுகளையும் துறந்து நான் இறைவனை வேண்டினால் எனக்கு வீடுபேறு தருவான் என்கிற அடிப்படை எதிர்பார்ப்பாவது ஒரு பக்தனிடத்தில் இருப்பது இயற்கை.
ஆனால் இந்த திருத்தொண்டர்கள் எத்தகையவர்கள் என்றால் இறைவனிடத்து கொண்ட அளப்பரிய அன்பு காரணமாய் இறைவனை வணங்குவதே முக்கியம் என்று கருதுவார்கள் தவிர, இறைவனை வணங்குவதால் தனக்குக் கிடைக்கிற வீடுபேற்றைக்கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள், தந்தாலும்கூட வேண்டாம் என்பார்கள் என்று சேக்கிழார் சொல்கிறார்.
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலில் விளங்கினார்”
இன்று பல அரசியல் இயக்கங்களில் அடிப்படை உறுப்பினர் இடத்தில் சென்று ஒருவர் சேருகிறார் என்றால் எந்த அடிப்படை உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சின்னச் சின்னதாக கட்சியிலே உயர்ந்து ஒரு முக்கியமான இடத்தை பிடித்து, தான் சார்ந்திருக்கிற கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறபோது அமைச்சராக வேண்டும் என்பது வரையில் இந்த அடிப்படை தொகையான சில ரூபாய் செலுத்தி உறுப்பினர் அட்டையை வாங்குகிறபோது கற்பனைகள் ஓடுகின்றன மனிதனுக்கு.
ஆனால் இறைவனே எதிரே வந்து நின்றாலும்கூட ‘நீ தருவதென்றால் வீடுபேற்றை தந்தாலும் சரி, இல்லை நான் மனிதனாக இந்த பூமியில் பிறக்க நேர்ந்தாலும்கூட அன்பை என் மனதிற்கு வரமாகக் கொடு” என்று கேட்கக்கூடிய அருளாளர்களை திருத்தொண்டர் புராணத்தில் பார்த்தோம்.
எனவே தொண்டு என்பது தன்முனைப்பில்லாதது. பேதங்கள் பாராதது. பொருளாசை ஈல்லாதது. சுயதேவைகளை சுருக்கிக்கொண்டு பிறருக்கு செய்கின்ற பணிகளை பெருக்கிக் கொண்டு இருப்பது என்று படிப்படியாய் நம்மாலே பார்க்க முடிகிறது.
தொண்டு புரிதல் என்கிற உந்துதல் தனி மனிதர்களுக்கு உண்டு என்பதால்தான் பன்னாட்டு சேவை இயக்கங்கள் பெரிதாக வளர்கின்றன. அரிமா இயக்கம், சுழற்சங்கம், ஜேசீஸ் என்று எத்தனையோ அமைப்புகள் ஒரு சர்வதேச தலைமையின் கீழே செயல்பட்டு வருகின்றன. அத்தகைய இயக்கங்களில் தொண்டர்களாக உறுப்பினர்களாக இணைகிறபோது குடும்பம் முழுவதும் அந்த இயக்கத்தில் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிப்பர்.
உதாரணத்திற்கு அரிமா இயக்கத்தில் ஒருவர் சேருகிறார் என்றால் அவர் பெயருக்கு முன் அரிமா என்று போடுவார்கள். அவர் மனைவியின் பெயருக்கு முன்னால் அரிமாட்டி என்று போடுவார்கள். அவர் பிள்ளைகளுக்கு என்று ஒரு சங்கத்தை வைத்து இளம் ஆரிமா என்று சொல்லுவார்கள். இத்தகைய அமைப்பு முறை சுழற்சங்கத்திலேயும் உண்டு. இதை நாம் இங்கு நினைவு கூறுவதற்குக் காரணம், தொண்டு நெறியில் ஒருவர் மட்டும் ஈடுபட்டால் போதாது, அவர் குடும்பமே இதில் ஈடுபட வேண்டும் என்கிற கருத்தாக்கம்தான் இதற்குக் காரணம்.
இந்த ஆணுகுமுறைக்கும் முன்னோடியாக விளங்குவது திருத்தொண்டர் புராணம்தான். குடும்பத்தின் தலைவர் ஒரு கொள்கை பெற்று நிற்பாரேயானால், மொத்த குடும்பமும் அவரது குறிக்கோளுக்குத் துணையாக, தொண்டுக்குத் துணையாக, சேவை மனப்பான்மைக்கு ஆதரவாக அமைந்திருக்கிறது.
திருத்தொண்டர் புராணத்தில் வருகின்ற பெரும்பாலான நாயன்மார்கள் வரலாற்றில் இந்த அருமையினை உணர முடியும்.
மரபின் மைந்தன் ம.முத்தையா