திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருடைய திருப்பதிகங்களை யாழில் இட்டு இசைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார்.
அவர் தம் துணைவியார் மதங்கசூளாமணியார் அந்தப் பதிகங்களை இசைப்பதில் கணவருக்குத் துணை நிற்கிறார்.
சோழ மன்னரிடத்தில் பணிபுரிந்து வந்த பரஞ்சோதியார், சிறுத்தொண்டர் என்ற பெயர் கொண்ட நாயனாராகிறார்.
தினமும் ஓர் அடியாரை அமுது சேவித்து அதன் பின்னரே தான் உண்பது என்னும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். இறைவன் ஒருமுறை பைரவத் திருக்கோலம் கொண்டு சிறுத்தொண்டர் வீடு வந்தார். அன்று சிவனடியார் யாரும் கிட்டாததால் சிவனடியார்களைத் தேடிச் சென்றிருந்தார்.
வெளியே காத்திருந்த இறைவன், சிறுத்தொண்டர் வந்ததும் தான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உண்கிற வழக்கம் உள்ளவர் என்றும், அப்படி உண்கிற நாள் அன்றுதான் என்றும் நரப்பசுவாகிய குழந்தை மாமிசத்தை உண்ணுவார் என்றும் அந்தக் குழந்தையை தாய் பிடிக்க தந்தை அறுத்து மனமகிழ்ச்சியுடன் சமைத்துக் கொடுத்தால்தான் உண்பேன் என்றும் நிபந்தனைகளை அடுக்கடுக்காக வைத்தார். இந்த நிபந்தனையை சிறுத்தொண்டர் ஏற்றது மாத்திரம் சிறப்பில்லை. அவருடைய துணைவியாராகிய திருவெண்காட்டு நங்கையார் ஏற்கிறார்.
ஈந்தப் பணிகளுக்கு ஆவர்கள் வீட்டிலே வேலை பார்க்கக் கூடிய சந்தனத்தாதியார் என்கிற பணிப்பெண்ணும் உறுதுணையாக இருக்கிறார். எனவே குடும்பத் தலைவன் கொண்ட குறிக்கோளுக்கு தொண்டு நெறிக்கு குடும்பம் முழுவதும் துணை புரிந்தால் எத்தகைய மேன்மைகள் சாத்தியமாகும் என்பதற்கு சிறுத்தொண்டர் புராணம் ஒரு சரியான உதாரணமாக திகழ்கிறது.
ஒரு தனி மனிதன் மேற்கொள்கிற கொள்கை ஏற்றவர்களின் உறுதுணையால் உரம் பெறுகிறது. இதே சூழலைத்தான் அப்பூதியடிகள் வரலாற்றிலேயும் நாம் பார்க்கிறோம்.
திருநாவுக்கரசருக்கு அமுது படைக்க வேண்டும் என்பதற்காக வாழையிலை அறுத்து வருமாறு மகனை அப்பூதியடிகளார் ஏவுகிறார். “நல்ல தாய் தந்தை ஏவ நான் இதை செய்யப் போகிறேன்” என்ற மனமகிழ்வோடு வாழை இலை அறுக்கப்போகிற சிறுவனை நாகம் தீண்டுகிறது.
நாகத்தினுடைய நஞ்சு தலைக்கேறுகிறபோதுகூட தீங்கு நேரும் முன்னால் அடியவருக்கு அமுது செய்யக்கூடிய வாழை இலையை பெற்றோர் இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்று வேகவேகமாக அந்தச் சிறுவன் வந்து வாழை இலையைத் தந்து தாயின் மடியில் சாய்ந்து உயிரை விடுகிறான். இது தொண்டு நெறியில் அந்த முழு குடும்பத்திற்கும் உள்ள முனைப்பை உணர்த்துவதற்காக நமக்குப் பயன்படுகிறது.
தொண்டர்கள் என்பவர்கள் தங்களுக்கென்று பெரிய தேவைகள் இல்லாதவர்கள். கொண்ட இலக்கு நோக்கி முன்னேறுபவர்கள். அதில் தங்கள் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பையும் பெற்று தங்கள் கனவுகளை முழுமையாக ஈடேறச் செய்பவர்கள் என்கிற வரையறையை திருத்தொண்டர் புராணம் நமக்கு விளக்குகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா