எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும் தீராத நோய் தீர்கிறது.
ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு அவன் நோயாளி என்ற எண்ணத்தைக் கொடுத்து விட்டால் அந்த நோய்க் கூறுகள் அவன் உடம்பில் தென்படுகின்றன என்றெல்லாம் எத்தனையோ பரிசோதனைகள் எடுத்துரைக்கின்றன.
மனிதனின் மனம் எழுப்புகிற எண்ணங்கள் இரும்புக் கோட்டையைவிட வலிமையானவை. இதனை ஒரு நாயனாரின் வரலாற்றை விளக்குவதன் மூலம் சேக்கிழார் உணர்த்துகிறார்.
சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆசை திருநின்றவூர் என்ற தலத்தில் வாழ்ந்த பூசலார் என்ற நாயனாருக்கு ஏற்பட்டது. கோயில் கட்டுவதற்கு அவரிடம் பணம் இல்லை. வேண்டிய பொருட்களை திரட்டிக் கொள்வதற்கு வழியில்லை என்பதனாலேயே சிவ பெருமானுக்கு கோயில் எழுப்புவதாக தன் மனதிலேயே கற்பனை செய்துகொண்டார். கற்பனை என்றால் மேலோட்டமான கற்பனை அல்ல. அடித்தளம் இடுவதில் இருந்து அடிக்கல் நாட்டுவதில் இருந்து அணுவணுவாக அந்த ஆலயம் உருவானது. கற்பனையிலேயே தச்சர் களெல்லாம் வந்தார்கள். ஆகம முறைப்படி அவர் ஆழ்மனதில் அந்தக் கோயில் உருவானது. நீண்ட நாட்கள் இந்தத் திருக்கோயிலை அவர் மனதிலே அவர் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.
“அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள்எல்லாம்
வடிவுரும் தொழுகல் முற்ற மனத்தினால் வகுத்து
மானமுடிவுறும் சிகரம் தானும் முன்னிய மனத்தில் கொண்டு
நெடிதுநாள் கூட கோயில் திறம்பட செய்தார்”
என்று சேக்கிழார் இதனைப் பாடுகிறார்.
உள்ளத்திலேயே உருவான கோயிலுக்கு திருக்குட நீராட்டு விழா செய்வதற்கு ஒரு தேதியையும் பூசலார் நிர்ணயிக்கிறார். அவர் மனதுக்குள் இப்படி ஒரு மகத்தான கோயில் எழுவதை அவர் அறிவார். சிவன் அறிவார் அன்றி வேறொருவர் அறியார். காஞ்சியில் காடவர்கோன் என்ற அரசர் கல்லால் ஆன கோயில் ஒன்றினை சிவபெருமானுக்கு உருவாக்குகிறார். அவர் ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்வது என்று நிர்ணயித்த தேதியும் தன் மனக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வது என்று பூசலார் நிர்ணயித்த தேதியும் ஒன்றாகவே அமைந்தன.
பூசலாரின் பெருமையை பூமிக்கு உணர்த்த வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்குத் தோன்றுகிறது. எனவே காடவ மன்னனின் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். “நீ திருக்குட நீராட்டுக்கு என்று நிச்சயித்து இருக்கிற அதே தேதியில் திருநின்றவூரில் என்னுடைய அன்பனாகிய பூசலார் ஓரு நல்ல திருக்கோயிலை தன் மனதிற்குள் நினைத்து, நினைத்து கட்டியிருக்கிறார். அந்தக் கோயில் குட முழுக்கிற்கு நான் செல்லவேண்டி இருப்பதால் உன்னுடைய ஆலய குடமுழுக்கை இன்னொரு நாள் வைத்துக்கொள்” என்று கனவில் சிவபெருமான் சொல்லியிருக்கிறார்.
பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனாகிய பெருமானுக்கு ஒரே நாளில் இரண்டென்ன இரண்டு லட்சம் கோயில்களில் எழுந்தருளக் கூடிய ஆற்றல் இருக்கிறது. ஆனாலும்கூட பூசலாரின் பெருமையை அரசன் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆண்டவன் அப்படி ஒரு விளையாட்டைச் செய்தார்.
“நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்துள் நாளைநாம் புகுவோம் நீயும்
ஒன்றிய செயலை நாளை ஒழித்து பின்கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் தொண்டு அருளப் போந்தார்”
என்கிறார் சேக்கிழார்.
மரபின் மைந்தன் ம.முத்தையா