இறைவனே விரும்பி எழுந்தருளுகின்ற ஒரு திருக்கோயிலை அமைத்த அடியாரை கண்டு வணங்க வேண்டும் என்ற பேரன்போடு படைசூழ அரசன் புறப்பட்டு நின்றவூருக்கு வந்து சேர்கிறார்.
அறிவிப்பே இன்றி அரசன் வந்ததைக் கண்டு அந்த ஊர் மக்களெல்லாம் அவனை வணங்கி வரவேற்கின்றனர். இன்று குடமுழுக்கு காணுகிற கோயில் எந்த இடத்திலே இருக்கிறது என்று அரசன் கேட்க அவர்கள் மருள்கிறார்கள். அப்படி ஓர் ஆலயமே இங்கு எழவில்லையே என்கிறார்கள். அப்படியானால் பூசலார் என்று ஒருவர் கோயில் கட்டினாராமே அவர் எங்கே இருக்கிறார்? என்று கேட்க பூசலாரினுடைய வீட்டிற்கு எல்லோரும் வழிகாட்ட உடன் வருகிறார்கள். பூசலாரைக் காண்கிற அரசன் அவரைத் தொழுது ஆலயம் எது என்று கேட்கிற பொழுது என்னிடம் பணம் இல்லாமல் நான் மனதினால் இதைக் கட்டினேன் என்று பூசலார் சொல்லுகிறார்.
“மன்னவன் உரைக்க கேட்ட அன்பர்தான் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாய்க் கொண்ட எம்பிரான் அருள்செய்தாரே
முன்வரு நிதியிலாமை மனத்தினால் முயன்ற கோயில்
என்னதாம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்துச் சொன்னார்”
பிறகு அரசன் பூசலாரை வணங்க அவர் மனத்துக்குள்ளேயே அந்தத் திருக்குட நீராட்டை நிகழ்த்தினார் என்று அவருடைய வரலாறு சொல்கிறது.
இன்று இலக்கு நிர்ணயித்தல் என்பது போன்ற
கோட்பாடுகளை எடுத்துச் சொல்லுகிற சுயமுன்னேற்ற பேச்சாளர்கள், உங்கள் கனவுகள் என்ன என்பதை வரையறை செய்யுங்கள். உங்கள் கனவை அடைந்துவிட்டது போலவே மனதுக்குள் படிப்படியாகக் கற்பனை செய்யுங்கள். திரும்பத் திரும்ப மனதிற்கு அந்த இலக்கு நோக்கி செல்லவேண்டும் என்ற தூண்டுதலைத் தந்து கொண்டே இருங்கள் என்பர்.
பூசல் ஏன்ற சொல்லுக்கு அன்பு என்று ஒரு பொருளும் உண்டு. அன்பே வடிவமாய் அமர்ந்திருந்த அடியார் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சிந்தித்து அதற்குப் போதிய பொருள் வசதி இல்லாததால் மனதிலேயே ஒரு கோயிலே உருவாக்குகிறார். அவர் எண்ணங்களுக்கு எவ்வளவு தூரம் வ-லிமை இருந்திருந்தால் அவருடைய மனக்கோயில் எவ்வளவு துல்லியமாய் உள்ளே எழுந்திருத்தால் அது கற்கோயிலை கட்டிய அரசன் கனவில் கடவுளையே செல்லத் தூண்டும் என்று சிந்தித்தல் வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் பெரிதும் பேசப்படுகிற தனக்குத்தானே தூண்டுதலாய் திகழுகிற கற்பனை முறை அல்லது சிந்தனை முறைக்கு தன் வாழ்க்கையின் மூலம் வழிகாட்டியாக விளங்குகின்றவர் பூசலார்.
“முன்னைப் பழமைக்கும் முன்னே பழமையதாய்
பின்னைப் புதுமைக்கும் போத்துகிற வெற்றியோடு
சைவம் திகழுகிறது” என்பதற்கு சரியான சான்று பூசலார் நாயனாருடைய புராணம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா