இன்றைய நவீன குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்று இணக்கமில்லாத குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பேசுவதோ கூடி உண்பதோ அருகிப் போய்விட்ட காலச்சூழலில் நாம் வாழ்கிறோம்.
உணவு நேரத்தில் ஒன்று கூடாத குடும்பங்களுக்கிடையே இடைவெளி பெருகுவது இயல்பு, ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக வசிக்கக்கூடிய சூழலை உருவாக்கும்.
இந்நிலையை, பிற தேவைகளும் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக பலரும் கண்டு வருகின்றார்கள். ஒரு குடும்பம் அதன் உறுப்பினர்கள் மத்தியில் இருக்கிற இடைவெளியை போதைப் பொருட்களாலும் மனச்சோர்வு விரக்தி போன்றவற்றை இட்டு நிரப்புகிறது. அங்கே விருந்தினர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கும்?
இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்றால் நன்கு அறிமுகமாக குடும்ப நண்பர்களே கூட முன்னறிவிப்போடுதான் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். உணவுக்கு வருவதென்றால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் நாகரீகம் என்ற பெயரால் இதயங்களுக்கு மத்தியில் இடைவெளி பெருகிக்கொண்டே போகிறது.
ஆனால் பழைய காலங்களில் விருந்து என்ற சொல்லுக்கே புதிது என்றுதான் பொருள்.
முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்களைக்கூட அன்போடு வரவேற்று அமுது படைத்து குடும்பமே சேர்ந்து கூட உண்டு அவர்களை மரியாதை செய்வது நம் மரபாக இருந்திருக்கிறது.
பெரிய அடியார்களை விரும்பி வரவேற்று உபசரித்தவர்கள் எல்லாம் முன்பின் அறியாதவர்கள்தான். அத்தகைய வரவேற்பும் விருந்தோம்பலும் எப்படி நடந்தது என்பதை சேக்கிழார் விளக்குகிறார்.
உறவினர்கள் வந்தால்கூட குழந்தைகள் நிமிர்ந்து முகம் பார்க்கக்கூட முடியாத இன்றைய காலகட்டத்தில் பெரிய புராணம் சொல்லுகின்ற வர்ணனைகளும் விளக்கங்களும் நமக்கு வியப்பைத் தருகின்றன.
விருந்தினர்களை அழைத்து வந்து அவர்கள் சிவனடியார்களாக இருப்பின் அவர் பாதங்களைக் கழுவி அமர வைத்து அவர்களையே கடவுளாகப் பாவித்து அவர்களை வணங்கி அர்ச்சனை செய்தபின் அறுசுவை உணவுகளையும், நால்வகை பதார்த்தங்களையும் படைத்து அவர்களை உண்பித்தார்கள் என்கிறது பெரியபுராணம்.
“கொண்டு வந்து மனைப்புகுந்து
குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆசனத்திடை
வைத்து அர்ச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தினில்
ஆறுசுவைத் திறத்தில் ஒப்பிலாது
அண்டர் நாயகர் தொண்டர்இச்சையில்
அமுது செய்ய அளித்துள்ளார்.”
மரபின் மைந்தன் ம.முத்தையா