விருந்தினர்களை முகமலர்ந்து வரவேற்பதற்கு குழந்தைகளை நாம் பழக்குவோமேயானால் அவர்கள் சமூக உணர்வு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதை நம் சமூகம் காலம் காலமாகக் கண்டிருக்கிறது.
வீட்டிற்குள் வருபவர்களைப் பார்த்துக் கூச்சமின்றி உரையாட குழந்தைகள் பழகிவிட்டால் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, வேலைவாய்ப்பு தேடி நேர்காணலுக்குச் செல்கிறபோது மனத்தடையில்லாமல் மகிழ்ச்சியுடன் அவர்களால் கலந்துரையாட முடியும்.
இன்று சின்னத்திரைக்கும் கைபேசியில் இருக்கிற விளையாட்டுகளுக்கும் குழந்தைகள் அடிமைகளாகிக் கொண்டிருக்கும்போது மனித உறவுகளுடைய மகத்துவம் அவர்களுக்குப் புரிவதில்லை.
அப்பூதியடிகள் இல்லத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளிய பொழுது இலையறுக்கப் போன பிள்ளையை பாம்பு தீண்ட நாவுக்கரசர் பெருமான் ‘ஒன்று கொலாம்’ என்று பதிகம் பாடி அந்தக் குழந்தையை உயிர்ப்பித்தார்.
அதற்கு முன்பு குழந்தை இறந்த செய்தியினைக்கூட அவருக்கு சொல்லாமல் பிள்ளையை ஒரு பாயில் வைத்து மடித்து வீட்டிற்குள்ளே ஒளித்து வைத்துவிடுகிறார்கள்.
திருநாவுக்கரசர் உண்ணத் தொடங்கும் முன் அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு ஆசி கூறி திருநீறு பூச வேண்டும் என்று சொல்லி இந்தப் பிள்ளையை அழைக்கும் போதுதான் உண்மை புரிகிறது. பதிகம் பாடி உயிர்ப்பிக்கிறார்.
அதன்பிறகு அங்கு என்ன நிகழ்கிறது என்பதை சேக்கிழார் சொல்கிறார். திருநாவுக்கரசரை நடுவே அமர்த்தி ஒருபக்கம் அப்பூதியடிகளும் மற்றொரு பக்கம் பிள்ளைகள் பெரிய திருநாவுக்கரசு, சிறிய திருநாவுக்கரசு ஆகியோரும் அமர்ந்திருக்க குடும்பத்துப் பெண்கள் உணவு பரிமாற அந்த வீட்டில் திருநாவுக்கரசர் அமுது செய்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
“மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந்து அமுது செய்ய
சிந்தை மிக்கு இல்ல மாதர்
சிறுஅமுது எடுத்து நல்க
கொந்தவை தாதுகொன்றை வேணிக்
கூத்தனார் அடியாரோடும்
அந்தமிழ் ஆளியார் அங்கு
அமுது செய்து அருளினாரே”
என்பது அப்பூதியடிகள் வீட்டில் திருநாவுக்கரசர் உணவு உண்டதை உணர்த்துகின்ற பாடல்.
அதே போல, வீட்டில் நெல்லில்லாத சூழலில் வயலில் விதைத்து வந்த விதை நெல்லைக் கூட கொண்டு வந்து உணவாக்கி வந்தவர்களுக்கு பரிமாறுகின்ற இளையான்குடிமாற நாயனாரின் புராணமும் விருந்தோம்பலின் இன்றியமையாமையை வருகிற தலை முறைக்கு விளக்குகிறது.
மரபின் மைந்தன் ம.முத்தையா