2562631996_ac154d7d1d

வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல்
பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம்
ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க
மாதரசி கொண்டாள் மனம்.

கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள்
நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் – கற்பகத்தாள்;
எல்லாம் அவளாகி யார்க்குந் தெரியாத
பொல்லாத பெண்ணானாள் போ.

நட்ட நடுநிசியில் நீலவான் கம்பளத்தில்
பட்டுமலர்ப் பாதம் பதிப்பாளே – சிட்டுகளின்
கூடுகளில் கண்மலரும் குஞ்சுகளைத் தாலாட்டி
பாடுவாள் வைகறைப் பாட்டு.

ஒன்பான் இரவுகளில் ஓங்காரி ஆளவந்து
தன்பால் உயிர்களைத் தாமீர்ப்பாள் – அன்னையள்
ஆளும் அரசாட்சி ஆணையி லேஒன்பான்
கோளும் பணியும் குனிந்து.

மேரு வடிவானாள் மேதா விலாசினி
தாருகக்கும் சோமேசன் தோள் சேர்வாள் – காருண்யம்
பூத்த திருமுகத்தில் புன்னகைப் பூசிதறும்
மாத்தவளைத் தேடும் மனது.

மூச்சின் இழைகளிலே மோக வலைபின்னி
பூச்சிபுழு எல்லாம் படைத்தாளே – ஆச்சரியம்
காட்சிக்கே எட்டாத கௌமாரி செய்கின்ற
சூழ்ச்சியினும் வேறுண்டோ சூது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *