சடசடக்கும் நெய்விளக்கில் சிரிப்பொலி காட்டி – அந்த
சரவிளக்கின் அசைவினிலே சிலம்பொலி காட்டி
படபடக்கும் மனதினுக்கு பக்குவம் தந்தாள் – எங்கள்
பராசக்தி அபிராமி தரிசனம் தந்தாள்!
நமசிவாயன் மேனியிலே பாதியை வென்றாள் – எங்கள்
நாயகியாள் உமைசிவாயம் ஆகியே நின்றாள்
குமுறலெல்லாம் தணிக்கவந்த குளிர்மழை ஆவாள் – எங்கள்
கடவூரின் அபிராமி காலங்கள் ஆள்வாள்!
பேரழகி நின்ற கோலம் பார்க்கத்தானே கண்கள் – அவள்
பெரும்புகழை சொல்லெடுத்துப் பாடத்தானே பண்கள்
பூரணியை நாரணியை பாடிப்பாடித் தொழுவோம் – எங்கள்
புகழ்க்கடவூர் நாயகியின் பொன்னடிகள் பணிவோம்!
காவல் கொள்ளும் நாயகியின் கால்நிழலே வீடு – அவள்
காதல் கொள்ளும் காலகாலன் கழல் நினைந்து பாடு
ஏவும்வினை யாவும்விழ ஏந்திழையாள் வருவாள் – அட
எத்திசையும் அபிராமி ஏகமாகி நிறைவாள்!