செவ்வண்ணக் கமலமென சிவந்திருக்கும் வதனம்
ஸ்ரீமாயன் கழல்வருடி சிவந்த கரக் கமலம்
எவ்வண்ணம் விழுந்தாலும் ஏற்றிவிடும் அபயம்
எம்மன்னை மஹாலக்ஷ்மி எழில்பதங்கள் சரணம்!
கருணைக்கே ஊற்றுக்கண் கமலைமலர்க் கண்கள்
கவலையெலாம் துடைக்கிற களிநகையோ மின்னல்
தரும்கைகள் கனகத்தை தடையின்றிப் பொழியும்
தஞ்சமென வந்தவரைத் தாங்கும் அன்னை சரணம்!
ஆழியிலே வந்தவளாம் அன்னைமஹா லக்ஷ்மி
ஆதிசேடப் பள்ளியிலே ஆளும் வரலக்ஷ்மி
பாழ்நிலத்தைத் தழைக்கவைக்கும் பாவைதான்ய லக்ஷ்மி
பார்த்துப் பார்த்து தரும் வடிவம் பூணும் அஷ்ட லக்ஷ்மி!
சங்கரர்க்குக் கனிகொடுத்த சிறுகுடிசை நோக்கி
சங்கையின்றி தங்கமழை பெய்துதுயர் போக்கி
எங்குமெங்கும் வளம்பெருகி எழும்நிலைகள் ஆக்கி
எல்லார்க்கும் வாழ்வளிப்பாள் எங்கள் லக்ஷ்மி தேவி!